Published : 06 Dec 2024 03:21 AM
Last Updated : 06 Dec 2024 03:21 AM
கூடலூர்: பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை நேற்று முன்தினம் கொண்டு சென்றனர். வல்லக்கடவு எனும் இடத்தில் சென்றபோது, கேரள வனத் துறை சோதனைச்சாவடியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. கேரள நீர்வளத் துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தங்களுக்கு இதுகுறித்து எந்த தகவலும் வராததால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று கேரள வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் நாளாக கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகள் நேற்றும் முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையில், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமையிலான நிர்வாகிகள் மகேஸ்வரன், அறிவழகன் உள்ளிட்டோர் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, "கட்டுமானப் பொருட்களை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்காதது குறித்து தமிழக உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரள மாநில அதிகாரிகளிடம் பேசி வருகின்றனர். இன்று (டிச. 6) கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT