Published : 05 Dec 2024 06:17 PM
Last Updated : 05 Dec 2024 06:17 PM

“வெள்ளம் பாதித்த மக்களுக்கு அரசின் ரூ.2,000 ஒருநாளுக்கு கூட காணாது” - பிரேமலதா கருத்து

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் ஒரு நாளுக்குக் கூட காணாது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று நடந்த திருமணத்தில் பங்கேற்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். விமான நிலையத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டேன். இது மிகப் பெரிய பாதிப்பு. விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்து சேரும் சகதியுமாக மாறி உள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா பகுதிகளும் கடும்பாதிப்பை சந்தித்து உள்ளன. ஆனால், முதலமைச்சர் எதிர்க்கட்சிகள் வயிற்றெரிச்சலில், வீண் விளம்பரம் தேடுவதற்காக பேசுகின்றனர் என்று கூறியிருக்கிறார். இது தவறான விஷயம். இதில் விளம்பரம் தேட வேண்டியது எதுவும் இல்லை. அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி வீசுகின்றனர். திமுக பேனர்கள் கிழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த மக்களும் மறியல் ஈடுபட்டுள்ளனர். இந்த அளவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. இதைப் பார்த்து தான் எதிர்க்கட்சிகள் வயிற்றெரிச்சல் பட வேண்டுமா என்று முதலமைச்சரைப் பார்த்து கேட்கிறேன்.

மக்களின் அவலங்களை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சி. அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக சரி செய்தால், ஆட்சியையும், முதலமைச்சரையும் வரவேற்கலாம். அதனை விடுத்து இந்த ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுது என்று புகழ வேண்டும் என்றால் எதிர்பார்த்தால் எப்படி முடியும். நல்லாட்சி நடக்கிறதா என்று மக்கள்தான் சொல்ல வேண்டும். இது தவறான முன்னுதாரணம். முதலமைச்சர் எதிர்க்கட்சிகளை குறைசொல்வதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும். விவசாயகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்திலேயே மக்கள் அகதியாக வாழும் நிலையை பார்த்தேன். மீண்டும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளோம்.

அனைத்து கட்சியினரும், சமூக ஆர்வலர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. முன்கூட்டியே திட்டமிட்டு தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை தீட்டி இருந்தால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது. எல்லாத்தையும் கோட்டை விட்டுவிட்டனர். இதில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும். மக்கள் சிறுக, சிறுக சேர்த்த அனைத்துப் பொருட்களையும் இழந்துள்ளனர். அவர்கள் உயிரை தவிர மற்ற அனைத்து இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.

வெறும் வாக்குக்கு ரூ.2 ஆயிரம், ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றதைப் போல், மறுபடியும் ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம் என்றால் அது ஒருநாளுக்குக் கூட காணாது. புதுச்சேரியில் கூட ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் முதலமைச்சர் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கினால்தான், அவர்களால் மீண்டு வர முடியும். எனவே உடனடியாக நிவாரணம் கொடுத்து சேரும், சகதியுமாக இருக்கக்கூடிய வீடுகளில் இருந்து மக்களை மீட்டு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x