Published : 05 Dec 2024 04:04 PM
Last Updated : 05 Dec 2024 04:04 PM
மயிலாடுதுறை: ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள, தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வர் கோயிலில் நன்கொடையாளர் பங்களிப்பில் செய்யப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான புதிய வெள்ளி ரத வெள்ளோட்ட விழா இன்று (டிச.5) நடைபெற்றது.
இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 234-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திண்டுக்கல் ஸ்ரீ சிவபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து வெள்ளி ரத வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ஆதீனகர்த்தர்கள் முன்னிலையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் 10,899 கோயில்களுக்கு குடமுழுக்குக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 34 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றால் இதனை ஆன்மிக ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?. திருக்கோயில்களுக்குச் சொந்தமான 65 தங்க ரதங்களும், 84 வெள்ளி ரதங்களும் முழுமையாக பழுது நீக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி பொறுப்பேற்றப்பின்னர் அறிவிக்கப்பட்ட 5 தங்க ரதங்களில் பெரியபாளையம் திருக்கோயிலில் ரூ.6 கோடி செலவில் தங்க ரதம் செய்யப்பட்டு,, பக்தர்களின் நேர்த்திக் கடனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 9 வெள்ளி ரதங்களில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வெள்ளித்தேர் பணிகள் நிறைவுற்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திடும் வகையில் உலா வருகிறது.
அதுமட்டுமல்ல பலநூறு கோடி மதிப்பீட்டில் புதிய மரத்தேர்களும், மரத்தேர் மராமத்து பணிகளும், திருத்தேர்களை பாதுகாத்திடும் வகையில் பாதுகாப்பு கொட்டகைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தருமபுரம் ஆதீனம் தொடர்ந்து எங்களுக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். அதன்படி ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் நிச்சயமாக இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசியது: இங்கே ஆன்மிகமும் அரசியலும் ஒன்றாக கலந்துவிட்டது. அமைச்சர் பெயர் சேகர்பாபு, எனது பழைய பெயர் பகவதிபாபு. கோயில் நிலங்களுக்கு குத்தகை கொடுக்காமல் டிமிக்கி கொடுப்போருக்கு ஆப்பு வைப்பதற்க இரண்டு பாபுக்களும் ஒன்றாக சேர்ந்துள்ளோம்.
ஆன்மிக அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், எல்லாம் சந்நிதானங்களையும் ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்குத்தான் உண்டு. நிறைய கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வருகிறார்கள். நல்ல முறையில் முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் வெள்ளத்தினிடையே புகுந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என அண்ணா சொன்னதை சேகர்பாபு செய்து காட்டியுள்ளார்.
இந்த ஆட்சி தொடர வேண்டும். ஆதினங்களுக்கு இணக்கமாக இருக்க வேண்டும். மத்திய அரசுடன் கொஞ்சம் இணக்கமாக செல்ல வேண்டும். அப்போதுதான் பைசாவை நைசாக வாங்க முடியும். பாரத பிரதமர் நல்ல மனிதர். பிரம்மச்சாரி. அகில உலகமும் அவரை பாராட்டுகிறது. அவருடன் கொஞ்சம் இணக்கமாக செல்லுங்கள்.
தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததுக்கு சாட்சி இலங்கை. தனி நாடு வேண்டும் தமிழர்களுக்கு. தமிழர்கள் அங்கு நன்றாக வாழ வேண்டும் என்பதை மத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முறையும் மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியும், தமிழகத்தில் இதே ஆட்சியும் அமைய வேண்டும். நான் எல்லா கட்சிக்கும் பொதுவான நபர். நல்ல காரியங்கள் யார் செய்தாலும் பாராட்டுவேன். தமிழும் கலையும் வளர்க்கிற ஆதீனமாக தருமபுரம் ஆதீனம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT