Published : 05 Dec 2024 03:08 PM
Last Updated : 05 Dec 2024 03:08 PM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம்: இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா அஞ்சலி

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா காட்டிய வழியில் தொடர்ந்து பணியாற்றிடவும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்கவும் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஜெயலலிதாவை மீண்டும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ, கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அவரைத் தொடர்ந்து சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்கள் தூவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறுதியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x