Published : 05 Dec 2024 12:47 PM
Last Updated : 05 Dec 2024 12:47 PM
விழுப்புரம்: திருவண்ணாமலை அருகே புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வி கண்டுள்ளது. மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் வரும் முன் காப்போம் என்ற திறன் இல்லை.
நவம்பர் 30-ம் தேதியே 117 அடிக்கு மேல் சாத்தனூர் அணை கிட்டதட்ட நிரம்பியது. மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி அணையை திறந்துவிட மாநில அரசுக்கு அறிவுருத்தியது. இதை செயல்படுத்தாமல் இந்த அரசு உறங்கிவிட்டது. அரசு தவறு செய்துவிட்டது என்று குற்றம் சாட்டினால் எச்சரிக்கை செய்துவிட்டதாக கூறியுள்ளது. நள்ளிரவில் விடப்பட்ட எச்சரிக்கை மக்களை சென்றடையவில்லை. இதனால் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது.
மழை பாதிப்புகளை சரி செய்வதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. தமிழக மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
விவசாயிகள் கடன் வலையில் சிக்கியதாக பஞ்சாப் நீதிமன்றம் அமைக்கப்பட்ட குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் கூறியுள்ளது. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அறிக்கையை பாமக ஆதரிக்கிறது. இதை வலியிறுத்தி திருவண்ணாமலையில் வரும் 21-ம் தேதி ‘உழவர் பேரியக்க மாநாடு’ நடைபெற உள்ளது.
டெல்லியில் சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாகப் பேசிய முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம். இதை ஏன் மாநில அரசு செயல்படுத்த தயங்குகிறது என்பதே வினா.
கடை வாடகைக்கு வாடகையுடன் 18 சதவீத விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு திரும்பப் பெற மறுக்கிறது. இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அகரம்பள்ளிப்பட்டியில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் திறக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டதை ஏற்கமுடியாது. இதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். இதனால் 88 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அகவிலைப்படி வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொழிலாளர் விரோத போக்கு.
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலவழிகள் உள்ளது. பொன்முடி மீதான சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது. இருப்பினும் இது மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் அறிவித்த சிங்கார சென்னை வளர்ச்சியை சில ஆண்டுகளில் நாம் வானத்தை நோக்கி பார்க்கப் போகிறோம்.
மானாமதுரையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பணியாற்றிய மருத்துவர்களைப் பாராட்டுகிறேன். நோயாளிகளிடம் மருத்துவர்கள் கனிவாக பேசினால் பாதி நோய் போய்விடும். நான் அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது மக்கள் எனக்கு கொடுத்தப்பட்ட பட்டம் சின்ன டாக்டர் என்பார்கள். காலை 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு மேல் திரும்புவேன். என்னை பார்க்க நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT