Published : 05 Dec 2024 12:15 PM
Last Updated : 05 Dec 2024 12:15 PM
சென்னை: “குடும்ப ஆட்சியில் தந்தை, மகன், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்” என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே முன்னாள் முதல்வர், ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி அவர் உறுதி மொழிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த உறுதிமொழியில், “தீயசக்தியை விரட்டியடிக்க, குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட கழகத்தை நிறுவிய நம் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அயராது உழைப்போம். கழகம் காக்க, கர்ஜிக்கும் சிங்கமெனத் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பிட, விண்ணை முட்டும் வீரர்களின், ஆர்ப்பரிப்பைப் பாரீர். பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதல்வர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம்.
குடும்ப ஆட்சியில் தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம். மக்கள் விரோத திமுக ஆட்சியிலே, குடிநீர் கட்டண உயர்வு; கழிவு நீர் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப் பதிவில் வழிகாட்டி மதிப்பு உயர்வு, பேருந்து கட்டண மறைமுக உயர்வு, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும், ஈரமில்லாத, இரக்கமில்லாத தந்திர மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.
திமுக ஆட்சியிலே, தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போச்சு! கள்ளச் சாராய மரணங்களால், ஏழை, எளிய மக்களின் குடும்பமே நிர்கதியாய் ஆச்சு. எங்கும் கஞ்சா போதைகளால், தமிழ் நாடே தத்தளித்துப் போச்சு. விடியா திமுக ஆட்சி தேவையா? என்று மக்கள் மனதில் எண்ணம் வந்திருக்கு. மக்கள் விரோத திமுக அரசை, வீட்டுக்கு அனுப்பும் வரை ஒயமாட்டோம்.
திமுக ஆட்சியில், குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை, தொடர் குற்றங்கள், இந்த ஆட்சியில் தொடர்கிறது. இங்கு தமிழகத்தில் ஆட்சி இருக்கிறதா ? இல்லையா? என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள். தமிழ் நாட்டை, குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசே ராஜினாமா செய்.
அதிமுக ஆட்சியிலே சிறப்பான திட்டங்கள் மக்களுக்கு செழிப்பான திட்டங்கள் ஏழைகள் பசியாற, அம்மா உணவகங்கள் ஏழைகள் நலம் பெறவே, அம்மா மருந்தகங்கள் மாணவர்கள் பயன்பெறவே, மடிக் கணினி திட்டங்கள் தாலிக்குத் தங்கம் என்று, தாய்க்குலம் புகழும் திட்டங்கள் இத்திட்டங்களை நிறுத்திவிட்டால், ஜெயலலிதாவின் புகழை, மறைத்துவிடாலம் என்று தீய சக்தியாளர்கள் நினைக்கின்றார்கள். அவர்களின் கொட்டத்தை அடக்கிடுவோம்.
ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார்! கல்விக் கடன் ரத்தென்றார். விலைவாசி குறையும் என்றார். பொய் முதல்வர் செய்தாரா?. இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம் என்று உறுதி ஏற்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் களத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் நின்று, வென்று காட்டுவோம். தமிழகத்தில் கழக ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT