Published : 05 Dec 2024 10:23 AM
Last Updated : 05 Dec 2024 10:23 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழையினால் 50,314 ஹெக் டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிக்கப் பட்ட விளைநிலங்களை கணக் கிட்டு, உடனுக்குடன் நிவாரண உதவிகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் வேளாண் மற்றும் தோட் டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் பயிர் சேத விவரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சித்தலூர் கிராமத்தில் சேதமடைந்துள்ள பருத்தி மற்றும் உளுந்து வயல், முடியனூர் கிராமத்தில் மரவள்ளிக்கிழங்கு வயல், பாசர் கிராமத்தில் உளுந்து, ஒகையூர் கிராமத்தில் மக்காச்சோள வயலினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேற்று பார்வையிட்டு சேத விவரங்கள், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, சேத பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரண உத விகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பர் 3 நிலவரப்படி பயிரிடப்பட்டுள்ள நெல், சிறுதானிய வகைகள், பயிறு வகை கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் 1,08,856 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில் 50,314 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றில் 33 சதவீதத்திற்கு மேல் 35,532 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT