Published : 05 Dec 2024 10:05 AM
Last Updated : 05 Dec 2024 10:05 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின்போது 55 செ.மீட்டர் மழை பெய்தது. மேலும் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கரையோர பகுதிகளான அரகண்டநல்லூர், திருவெண்ணெய் நல்லூர் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கொதித்தெழுந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக் கோரி நேற்று முன்தினம் அரசூர், இருவேல்பட்டு, அய்யனம் பாளையம், வி.சாத்தனூர் ஆகிய கிராமங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து திருவெண்ணெய் நல்லூர், சின்னசெவலை, அரகண்டநல்லூர், முத்தாம் பாளையம் ஆகிய கிராம மக்க ளும் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாள்தோறும் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “விழுப்புரம் மாவட்டத்தில் பெருமழைக்கு 14 பேர் உயிரிழந் துள்ளனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட் டுள்ளன. மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் மழை வெள்ளம் காரணமாக மூழ்கின.
இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதிப்பு, வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட, துணை முதல்வர் முதலில் வந்தார். அடுத்து அமைச்சர்கள், அரசு செயலாளராக உள்ள ஐஏஏஸ் அதிகாரிகள் அடுத்து முதல்வர் என அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். இவர்களின் பயண திட்டங்களை வகுக்கவே அதிகாரிகளுக்கு நேரம் போதவில்லை.
காலை 6 மணிக்கு அலுவல கம் வந்த அதிகாரிகள் இரவு 11 மணிக்கு வீட்டுக்கு செல்கின்றனர். பொதுமக்களி்ன் கோரிக்கைகளை கேட்பதற்கு கூட அதிகாரிகளுக்கு நேரமில்லை. இதனால், வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதற்கும், நிவாரண உதவிகள் வழங்குவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இரவு பகலாக பணியாற்றியும், பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தியையும், உயர் அலுவலர்கள், ஆட்சியில் இருப்பவர்களிடம் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் அரசியலில் முதலில் பலியாவது அதிகாரிகளான நாங்கள்தான்” என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT