Published : 05 Dec 2024 05:49 AM
Last Updated : 05 Dec 2024 05:49 AM
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 2022 ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ``300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும்'' என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடியில் சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இக்கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவ, மாணவியர்களிடம், தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், வேறு என்ன வசதிகள் தேவை என்றும் கேட்டறிந்தனர். விடுதியை அமைத்துத் தந்ததற்கு மாணவர்கள் தங்களின் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
64,455 சதுரஅடி பரப்பில்... விடுதி கட்டிடத்தை பொறுத்தவரை, சிறப்பு மாணவர்கள், மாணவியர்களுக்கு தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் தரை மற்றும் இரு தளங்களுடன் 64,455 சதுர அடி கட்டிட பரப்பளவில் 114 மாணவர் தங்கும் வகையில் 38 மாணவர்களுக்கான அறைகளும், 96 மாணவிகள் தங்கும் வகையில் 32 மாணவிகளுக்கான அறைகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்த விடுதிகளின் அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள், அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் சிறப்பு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வகை அலமாரிகள், அனைத்து அறைகளிலும் ஸ்மார்ட் லாக், பிரத்யேக சாய்தள அமைப்பு, ஒவ்வொரு குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் அவசரக் குறியீடு விளக்குகள், 4 மின்தூக்கிகளிலும் ஒலி மற்றும் ஒளி அமைப்பான்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இக்கட்டிடமானது, காப்பாளர் அறைகள், அலுவலக அறைகள், உணவு உண்ணும் அறைகள், பொது அறைகள், சமையலறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் நே.சிற்றரசு, உயர்கல்வித் துறை செயலர் கே.கோபால், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT