Published : 05 Dec 2024 05:57 AM
Last Updated : 05 Dec 2024 05:57 AM
சென்னை: நூலகங்களுக்கு இடையே புத்தகங்கள் உள்ளிட்ட வளங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்காசிய பல்கலைக்கழகம் மற்றும் நூலக தகவல் அறிவியல் கழகம் சார்பில் சர்வதேச நூலக உச்சி மாநாடு-2025 டெல்லியில் வரும் பிப்ரவரி 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான முன்னோட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநாட்டின் இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டு, அது சார்ந்த சிறப்பு கையேடும் வெளியிடப்பட்டது. மேலும், இந்த விழாவில் சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேசும்போது, ``கல்வியறிவால் மட்டுமே நாம் உலகை ஒருங்கிணைக்க முடியும். இதற்கு நூலகங்கள் பெரிதும் உதவி செய்கின்றன. நூலகங்களே நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. இங்கு அறிவு என்பது பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
அதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றை நூலகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நூலகங்களுக்கு இடையே புத்தகங்கள் உள்ளிட்ட வளங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். ஆய்வுப் பணியில் ஈடுபடுவோர் நிச்சயம் நூலகத்துக்கு வருவார்கள். அப்போதுதான் அவர்கள் கற்றது கை மண் அளவு என்பதை உணர்கின்றனர். எனவே, அனைவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் தெற்காசிய பல்கலைக்கழகத் தலைவர் கே.கே.அகர்வால், துணைத் தலைவர் பங்கஜ் ஜெயின், இந்திய தேசிய நூலக முன்னாள் தலைமை இயக்குநர் பி.ஒய்.ராஜேந்திர குமார், நூலக தகவல் அறிவியல் கழகத்தின் தலைவர் பி.வி.கொன்னூர், செயலாளர் பி.எஸ்.சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச உச்சி மாநாடு தொடர்பான விவரங்கள் மற்றும் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை https://gls25.org/ எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT