Published : 05 Dec 2024 06:05 AM
Last Updated : 05 Dec 2024 06:05 AM

வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின்​கீழ் 79 புதிய திட்ட பணிகள் தொடக்கம்: நிறைவடைந்த 29 பணிகளை​யும் முதல்வர் தொடங்கி வைத்​தார்

வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் வீட்டு​வசதி, நகராட்சி நிர்​வாகம், எரிசக்தி, மருத்​துவம், உள்துறை சார்​பில் 2-ம் கட்டமாக ரூ.1383 கோடி​யில் 79 புதிய திட்​டப்​பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகளை திறந்து வைக்​கும் நிகழ்ச்சி, சென்னை வால்​டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு​வில் நேற்று நடைபெற்​றது. திட்​டப்​பணிகளை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, முடிவுற்ற பணிகளை பயன்​பாட்டுக்கு திறந்து வைத்​தார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள். | படம்: ம.பிரபு |

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வானிலை கணிப்புகளைவிட அதிக மழை கொட்டித் தீர்க்கிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், உலக நாடுகளிலும் இதுபோன்ற பாதிப்புகளையும் பார்க்கிறோம். எல்லா நாட்டிலும் நடக்கிறது என்பதால் தமிழகம் அலட்சியமாக இருந்ததில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். விரைவில் பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு வருவோம்.

மொத்த தமிழக​மும் மீண்டு வரும்: கடந்த காலங்களில் மழை, வெள்ளத்தால் தவித்த சென்னையை மீட்டெடுத்ததுபோல மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழகமும் மீ்ண்டு வரும். துன்பப்படும் மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி, ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர். கடந்த 2015-ல் செயற்கை வெள்ளத்தில் சென்னையை தவிக்கவிட்டதுபோல நாம் இப்போது தவிக்கவிடவில்லை.

முன்பு சென்னையில் மழை பெய்தால், உதவி கேட்டு அல்லல்படும் நிலை இருந்தது. அந்த காலம் மலையேறிவிட்டது. நாம் எடுத்த நடவடிக்கையால் சென்னை மழை நின்ற மறுநாளே மீண்டுள்ளது.

மக்களின் பாராட்டுகள்தான் எதிர்க்கட்சியை வயிறெரிய வைத்துள்ளது. அனைவரும் களத்தில் உள்ளதால் அரசியல் செய்ய முடியாமல் தவி்க்கின்றனர். நம்மை பொருத்தவரை மக்களின் மனதுதான் முக்கியம். பொதுமக்கள் முன்வைக்கும் நியாயமான புகார்களை, கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு அதை தீர்க்க செயல்படுவோம்.

பெருமைமிகு சென்னை: வள்ளலார் பெருமைமிகு சென்னை என்பார். நம்பி வந்தவர்களை சென்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆயிரம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் இன்று ரூ.6,300 கோடியில் 252 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

குடிநீர், சீரான கழிவுநீர் செல்லும் அமைப்புகள், கழிவுநீரேற்று நிலையங்கள் மேம்பாடு, மருத்துவ வசதி, தொழிற்கல்வி, பகிர்ந்த பணியிடம், நூலகம் தரம் உயர்த்துதல், கல்வி மையம், பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், சீரான சாலைகள், பூங்காக்கள் துணை மின் நிலையங்கள், 400 சதுரஅடியில் புதிய குடியிருப்புகள் என தேவைகளை பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றுகிறோம். சென்னைக்காக திமுக அரசு கொண்டுவந்த மேம்பாலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டங்களால்தான் என்றுமே சென்னை திமுகவின் கோட்டையாக விளங்குகிறது.

சென்னையை எப்படி கடந்த காலங்களில் வளர்த்து எடுத்தோமோ, அதேபோல எதிர்காலத்துக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, மின்துறை செயலர் பீலா வெங்கடேசன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x