Published : 05 Dec 2024 06:34 AM
Last Updated : 05 Dec 2024 06:34 AM
சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னையில் கடந்த ஆண்டு ‘மிக்ஜாம்’ புயலின்போது ரூ.6,000 இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அவர்களை விட மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதியானது. அனைவருக்கும் குறைந்தது ரூ.10,000, சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி.: வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வசிப்போருக்கு ரூ.5 ஆயிரமாக நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவக்கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் என அறிவிக்க கோருகிறோம். விவசாய பாதிப்புக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக காலத்தே வழங்க வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம், நெற்பயிருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். எனவே, அவர் தற்போது அறிவித்த நிவாரணத் தொகையை நான்கு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பழனிசாமி அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள், முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக முகாமிலிருந்து திமுக அரசு வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றன.
பேரிடர் காலங்களில் மக்களுக்கான குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறேன். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT