Published : 05 Dec 2024 02:54 AM
Last Updated : 05 Dec 2024 02:54 AM
தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6 கோட்டங்களில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நேற்று தொடங்கியது. ரயில்வே ஊழியர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ரயில்வேயில் முதல்முறையாக கடந்த 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடந்த தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) வெற்றி பெற்று, அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டது.
கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் நடைபெறாமல் இருந்த இத்தேர்தலை நடத்த டிஆர்இயு உட்பட பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இதற்கிடையே, ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலை நடத்த ரயில்வே வாரியம் 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதையடுத்து, ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகின.
வேட்புமனு தாக்கல் முடிந்து, ரயில்வே தொழிங்சங்கங்களின் இறுதி பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிங்சங்கங்கள் இடம்பெற்றன. இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் ரயில்வே ஊழியர்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.
இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நேற்று காலை தொடங்கியது. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 140 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்றது. எல்லா இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக தேர்தலை நடத்தும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் கோட்ட அலுவலகம், தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் உள்ள ரயில்வே அலுவலகம், பெரம்பூர் பணிமனை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 38 வாக்குசாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டினர். வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி, ரயில்வே அதிகாரிகள் கண்காணித்தனர்.
இத்தேர்தல் குறித்து எஸ்ஆர்எம்யு தலைவர் ராஜா ஸ்ரீதர் கூறியபோது, ‘‘கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் தனியார் மயமாக்கலை கைவிட கோரி தொடர்ந்து போராடுவோம். 8-வது சம்பள கமிஷனை பெற்றுத்தர முயற்சிப்போம். இதுதவிர, பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த விஷயங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தோம். இத்தேர்தலில் அமோகமாக வெற்றி பெறுவோம்’’ என்றார்.
டிஆர்இயு முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்துள்ளோம். எனவே, பெருவாரியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம்’’ என்றார்.
இத்தேர்தல் 3 நாட்கள் நடைபெறுகிறது. தெற்கு ரயில்வேயில் சுமார் 76,000 தொழிலாளர்கள் வாக்களிக்கின்றனர். முதல் 2 நாட்கள் ரயில்வே நிர்வாக பிரிவு உள்ளிட்ட ஊழியர்களும், 3-வது நாளில் ரயில் ஓட்டுநர், கார்டுகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 65% வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.
வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளன. மொத்த வாக்காளர்களில் 23 ஆயிரம் ஓட்டுகளை (30%) பெறும் சங்கத்துக்கு ரயில்வே அங்கீகாரம் கிடைக்கும். இந்த சங்கம், ரயில்வே தொழிலாளர்களின் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ரயில்வே நிர்வாகத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 15 சதவீத வாக்குகள் பெறும் சங்கத்துக்கு கூட்டம் நடத்தவும், செய்தி பலகை வைக்கவும் அனுமதி கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு பிறகு, ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT