Published : 05 Dec 2024 05:41 AM
Last Updated : 05 Dec 2024 05:41 AM
சென்னை: செம்பரம்பாக்கத்தில் நடந்த அதே தவறைத்தான் சாத்தனூர் அணை திறப்பில் திமுக அரசு செய்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு 7.32 டிஎம்சி. கடந்த நவம்பர் 30-ம் தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.55 அடி. அதாவது ஒன்றரை அடி நீர்மட்டம் உயர்ந்தாலே அணை நிரம்பி பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மொத்தமாக 170 செ.மீ. மழை பெய்த நிலையில், பெரு வெள்ளம் ஏற்படும் என்பதை உணர்ந்து, மக்களை பாதிக்காத வகையில் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை திறந்து அணை நீர்மட்டத்தை அரசு குறைக்காதது ஏன்? கடந்த 1-ம் தேதி இரவு 10 மணிக்கு 4-வது வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அப்போது, அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 30,000 கனஅடி மட்டுமே. அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு 1.30 லட்சம் கனஅடி வெளியேற்றப்பட்டதாக அரசு கூறியுள்ளது. ஆனால், கூடுதல் நீர் திறக்கப்பட்டது குறித்து புதிய எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி திறக்கப்படும் என்று கூறிவிட்டு, 1.30 லட்சம் கனஅடி திறக்கப்பட்டால், அதை மக்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்.
கடைசியாக கடந்த 2-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 1.68 லட்சம் கனஅடி திறக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. ஆனால், அரசு கூறுவதுபோல எச்சரிக்கை அதிகாலை 2.45 மணிக்கு விடப்படவில்லை என்பதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணி அளவில்தான் ஊடகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வள துறையின் எச்சரிக்கை சென்றடையவில்லை. எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர்.
கடந்த 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வர வர திறக்காமல், அனைத்தையும் சேர்த்து வைத்து மொத்தமாக திறந்ததால்தான் பேரழிவு ஏற்பட்டது. அதே தவறைதான் சாத்தனூர் அணை திறப்பு விவகாரத்தில் திமுக அரசு செய்துள்ளது. இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...