Published : 04 Dec 2024 09:42 PM
Last Updated : 04 Dec 2024 09:42 PM

“பேரிடருக்கு நிதி தராத மத்திய அரசுக்கு மாநில அரசுகள் வரி அளிக்கக் கூடாது” - சீமான்

காங்கயம்: “பேரிடர் காலங்களில் நிதி தராத மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் வரி அளிக்கக்கூடாது” என காங்கயத்தில் சீமான் தெரிவித்தார்.

காங்கயத்தில் நாம் தமிழர் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (டிச.4) நடந்தது. இதில் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஞானமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் குற்றங்களை தடுப்பது போல் தெரியவில்லை.

சீமான் எங்கு செல்கிறார், யாரோடு பேசுகிறார் என்பதை கண்காணிக்கும் அரசு குற்றங்களை தடுப்பதில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் கட்சிகள், மழை வெள்ளத்தை தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்றால் அவரை பார்க்க ஒரு கூட்டம் வரும். விஜய் நிவாரணம் தருவதை வரவேற்கிறேன்.

எந்த நேரமும் பாஜக அமைச்சர்கள், பிரதமர்களை பார்க்க முடிகிறது. அவர்களிடம் பேசி திமுக அரசு நிவாரணத்தை பெற வேண்டும். மத்திய அரசுக்கு ஏது நிதி? மாநில அரசுகள் கொடுக்கும் நிதிதான். எந்த புயலுக்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்கியது கிடையாது. குஜராத் மீனவனை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தால் இந்திய கடற்படை மீட்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 850 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. பேரிடர் காலங்களில் நிதி தராத மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் வரி அளிக்கக்கூடாது” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x