Published : 04 Dec 2024 08:05 PM
Last Updated : 04 Dec 2024 08:05 PM
திருச்சி: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் தேர்தலில் தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர பணம், மது, பிரியாணி விநியோகம் என திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், பொன்மலை ஆகிய பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்திய ரயில்வேயில் 12.20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ரயல்வே ஊழியர்கள் சம்பளம், போனஸ் உள்ளிட்ட பணம் பலன்கள், பிரச்சினைகள் குறித்து தேர்தலில் அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் தான் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவர். இந்திய ரயில்வேயில் முதல் முறையாக கடந்த 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது.
30 சதவீதம் அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 15 சதவீதம் அங்கீகாரம் பெறும் சங்கங்கள், தங்கள் சங்க பதாகைகள் (போர்ட்) வைத்துக்கொள்ளவும், கூட்டங்கள் நடத்தவும் அனுமதிக்கப்படுவர். கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2019ம் ஆண்டுக்கு பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இத்தேர்தலில் தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யூ எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யூ எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ் எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறுவதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தென்னக ரயில்வேயில் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையம், பொன்மலை பணிமனை ஆகிய இடங்களில் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜங்ஷனில் உதவி கோட்ட ரயில்வே மேலாளர் பி.கே.செல்வன் தலைமையில், கோட்ட தனி அலுவலர் சுவாமிநாதன் மேற்பார்வையிலும், பொன்மலையில் தலைமை பணிமனை மேலாளர் பேட்ரோ தலைமையில், தனி அலுவலர் திருமுருகன் மேற்பார்வையிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. நாளையும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ரயில்களுக்குள் பணிப்புரியும் ஓடும் தொழிலாளர்களுக்கு மட்டும் நாளை மறுநாள் (டிச.6) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவர பொன்மலை பகுதியில் வாக்களிக்க வந்தவர்களுக்கு மது, பிரியாணி, பணம் என பலமான கவனிப்பு நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தில விஞ்சும் அளவுக்கு சங்கங்கள் வாக்காளர்களை கவனித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT