Published : 04 Dec 2024 07:16 PM
Last Updated : 04 Dec 2024 07:16 PM

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளம்: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தில் சிக்கி, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 55 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளநீரால் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன. இந்நிலையில், சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், மற்ற காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சங்கராபரணி ஆறு, தொண்டி ஆறு, மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளப்பெருக்கால் சாலைகளைக் கடந்து செல்லும்போதும், வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த திங்கள்கிழமை மாலை வரை 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளரான ரா.சக்திவேல் (45), வளவனூர் அருகே தொந்திரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (54), வளவனூர் அருகே தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் (75), விழுப்புரம் அருகே தி.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குப்பு (67), சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (75), திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (38), விக்கிரவாண்டி ஆர்.சி. மேல்கொந்தை ஆற்றுப்பாலம் அருகே பைக்கில் சென்ற புதுச்சேரி மாநிலம் கொம்பாக்கத்தைச் சேர்ந்த த.மனோகரன் (67) ஆகியோர் உயிரிழந்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் மலட்டாறு மயானம் அருகே வெள்ளநீரிலிருந்து தப்பித்துக்கொள்ள மனைவி, மகனோடு மரத்தில் ஏறிய ஏனாதிமங்கலம் ஏமப்பூரைச் சேர்ந்த கலையரசன் மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

மேலும், விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி (85), தனபாக்கியம் (81), சேர்ந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த நாவம்மாள் (50), பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (56), ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (25), விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (54) ஆகிய 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x