Published : 04 Dec 2024 06:30 PM
Last Updated : 04 Dec 2024 06:30 PM
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (Newspace India Limited) அமைப்பு மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி ராக்கெட் வாயிலாக விண்ணில் நிலைநிறுத்த இஎஸ்ஏ நிறுவனத்துடன், இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பானது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி ப்ரோபா-3 செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடைசிநேர சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து ராக்கெட் ஏவுதலானது நாளை (டிச.5) மாலை 4.12 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
இதற்கிடையே ப்ரோபா-3 செயற்கைக்கோளை புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அங்கிருந்தபடியே 2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் தூரத்தில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT