Published : 04 Dec 2024 02:46 PM
Last Updated : 04 Dec 2024 02:46 PM
சென்னை: விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி தேவையான உணவு, பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உடனடியாக வழங்கவும் அமைச்சர்கள் தலைமையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் குழு அமைத்து உத்தரவிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது, என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும் கண்காணிப்பு அலுவலர்களையும் துரிதமாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பாக தங்குமிட வசதி, தேவையான உணவு, பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உடனடியாக வழங்கவும் அமைச்சர்கள் தலைமையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் குழு அமைத்து உத்தரவிட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பெருவெள்ள பாதிப்புகளை கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, வனத்துறை அமைச்சர் பொன்முடி , மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி , போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாந்த் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT