Published : 04 Dec 2024 02:36 PM
Last Updated : 04 Dec 2024 02:36 PM
கும்பகோணம்: திருட்டு மணல் ஏற்றி வந்த கும்பல் லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மோத முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வருவாய்த்துறையினர் 26 கி.மீ. 1.45 மணி நேரம் ஜீப்பில் துரத்திச் சென்று லாரியை பிடித்தனர்.
பாபநாசம் வட்டம், ராராமுத்திரைக்கோட்டை உள்பட 10 கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா பெறுபவர்களை ஆய்வு மேற்கொள்ள, பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் அலுவலர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் அரசுக்கு சொந்தமான ஜீப்பில் சென்றனர். ஜீப்பின் ஓட்டுநராக கணேஷ் இருந்தார்.
இந்தநிலையில் 9 கிராமங்களில் ஆய்வுப் பணியினை முடித்த அதிகாரிகள், இறுதியாக ராராமுத்திரைக்கோட்டையில், ஆய்வை முடித்து விட்டு, அந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் அலுவல் தொடர்பாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிரில் அதிவேகமாக வந்த லாரி, ஜீப்பின் முன்பு பேசிக்கொண்டிருந்த அதிகாரிகள் மீது மோதுவது போல் வந்ததால், அதிகாரிகள், தெறித்து ஓடினர். இதில் அதிஷ்டசவசமாக அதிகாரிகள் உயிர் பிழைத்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அந்த லாரி, அரசுக்கு சொந்தமான ஜீப்பைச் சேதப்படுத்தி விட்டு, மற்றொரு பக்கம் திருப்பி வேகமாக சென்றது.
அந்த லாரியில் அனுமதியின்றி மணல் திருடிச்செல்வது தெரிய வந்ததையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை பின்தொடர்ந்து 26 கி.மீ. 1.45 மணி நேரம் பல சிரமங்களுக்கிடையே சென்று, குளிச்சப்பட்டு கிராமத்தில் லாரியை பிடித்து, அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாகக் கூறிய வருவாய்த்துறையினர், "ஆய்வுப் பணியை முடித்து விட்டு, ராராமுத்திரைக்கோட்டையில் ஜீப்பின் முன்பு நின்றிருந்த போது, திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியை, நாங்கள் பிடிக்க வந்தோம் என எண்ணி, எங்களை மோதி விட்டு, லாரியுடன் தப்பித்துச் செல்லலாம் என மோத முயற்சி மேற்கொண்டனர். ஆனால் நாங்கள் அங்கிருந்த தெறித்து ஓடியதால், லாரி ஓட்டுநர், மற்றொரு பக்கம் லாரியை திருப்பிச் சென்றார். இதனால் ஜீப்பின் ஒருபுறம் சேதமடைந்தது.
பின்னர், அந்த லாரியை பின்தொடர்ந்து சென்றதையறிந்து, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 பேரில் ஒருவர் எங்களது ஜீப்பை லாரிக்கு முன்பு செல்ல விடாமல், நடுவில் இசட் வடிவத்தில் அச்சுறுத்தும் வகையில் இடையூறு செய்தும், மற்றொருவர் வட்டாட்சியர் அமர்ந்திருந்த இருக்கையின் ஓரமாக வந்து, லாரி ஓட்டுநரிடம், செல்போன் மூலம், மணலை லிப்ட் மூலம் பின்னால் தூக்கி விட்டால், ஜீப்பும், அதிகாரிகளும் சிக்கிக்கொள்வார்கள், நாம் தப்பித்துவிடுவோம் என எங்களை மிரட்டும் தோரணையில் பேசியதையறிந்த, வட்டாட்சியர், இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம், ஜீப்பில் டீசல் இருக்கும் வரை தொடர்ந்து பின்தொடருவோம் என அவரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த லாரியை பின்னால் தொடர்ந்தோம்.
அவர்கள், பாபநாசம் வட்டம் வழியாகச் சென்று, ஒரத்தநாடு வட்டத்திற்குள் நுழைந்து, பின்னர், தஞ்சாவூர் வட்டம் குளிச்சப்பட்டில் சென்று கொண்டிருந்த போது, குறுக்கே மாடுகள் இருந்ததால், அந்த லாரி அதற்கு மேல் செல்ல முடியாததால், லாரி ஓட்டுநர், லாரி ஒடிக்கொண்டிருந்த போதே, அதிலிருந்து கீழே குதித்து, பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏறி தப்பித்துச் சென்றார். பின்னர், துணை வட்டாட்சியர் பிரபு, ஜீப்பில் இருந்து இறங்கி, லாரியில் ஏறி, பிரேக்கிட்டு நிறுத்தினார், இதனால் மாடுகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதற்கிடையில், எஸ்பி அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கும் தகவல் அளித்ததின் பேரில், அவர்கள், நாங்கள் அனுப்பிய மேப்பை வைத்து, அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததால், போலீஸார், குளிச்சப்பட்டிற்கு வந்து அந்த லாரியை, காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். சுமார் 26 கி.மீ. சுமார் 1.45 மணி நேரம் தொடர்ந்து விரட்டிச் சென்ற சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறையினரிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாகப் பேசிய போலீஸார், "வட்டாட்சியர் பறிமுதல் செய்த லாரி மீது மணல் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த லாரி, மாரியம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்தது. மேலும், லாரியின் எண் மற்றும் சிசிடிவி காட்சி பதிவு மூலம், தப்பியோடியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT