Published : 04 Dec 2024 02:22 PM
Last Updated : 04 Dec 2024 02:22 PM
திருப்பூர்: “விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் இன்று (டிச.04) பேசிய சீமான், “அரசின் நடவடிக்கைகள் மழை வெள்ளத்தில் ஆழமாக மூழ்கிவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் திறந்து வைத்த பாலம் மூழ்கிவிட்டது. இப்படிதான் ஆட்சியின் தரமும் இருக்கிறது.
கடலூரும், சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் புயலால் பாதிக்கப்படுகின்றன. அதற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்வது தானே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் நாம் இருப்பதே வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானம். பொன்முடியின் மீது வீசப்பட்ட சேறு, தண்ணீரால் சுத்தப்படுத்தினால் போய்விடும். ஆனால் இந்த ஆட்சியாளர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட கறையை எப்படி துடைக்க முடியும்?
விஜய்யால் மக்கள் களத்தில் போய் நிற்கமுடியாது. காரணம் அவர் போய் அங்கு நின்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்று வருகிற கூட்டம் அதிகமாகிவிடும். அதனை சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படி நடந்தால் அதற்கு ஒரு விமர்சனம் எழும். விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார். ஆனால் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தார்களே? அதை என்ன சொல்வது?
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களுக்கு வரி செலுத்துகிறீர்கள். மாநிலங்களின் வரிதான் மத்திய அரசுக்கு நிதியாக செல்கிறது. அதை தரமுடியாது என்று சொல்லவேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...