Published : 04 Dec 2024 02:16 PM
Last Updated : 04 Dec 2024 02:16 PM
சென்னை: “திமுக அரசு தனது அதிகார பலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தி, ‘சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் வெள்ள பாதிப்பு’ என்ற உண்மையை மறைக்கப் பார்க்கிறது. சாத்தனூர் அணை திடீரென திறக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் தான் காரணம் என்றாலும், சாத்தனூர் அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் டிசம்பர் 2-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில், எவ்வித முன்னெச்சரிக்கையும் விடுக்காமல், வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது மிக மிக முக்கியமான காரணமாகும்.
தமிழகத்தில் சிறு அணை திறக்கப்பட்டாலும் அதற்கான அறிவிப்பை முதல்வர்தான் வெளியிடுகிறார். ஆனால், சாத்தனூர் அணை திறப்பு பற்றி எந்த அறிவிப்பையும் யாரும் வெளியிடவில்லை. டிசம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சாத்தனூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. அப்போதே, படிப்படியாக தண்ணீரை வெளியேற்றி இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அணையிலிருந்து நீரை வெளியேற்றாமல், திங்கள்கிழமை அதிகாலை திடீரென மிகமிக அதிக அளவு தண்ணீரை வெளியேற்றியது தான் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம்.
இந்த உண்மை மக்களுக்கு தெரிந்து விட்டது. திமுக அரசின் செயலற்றத் தன்மை அம்பலமாகிவிட்டது என்பதால், அதை மறைப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார். அதாவது, சாத்தனூர் அணை ஐந்து முறை திறக்கப்பட்டது என்கிறார். அப்படி ஐந்து முறை திறக்கப்பட்டிருந்தால் அது குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு மக்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை?
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், அரை மணி நேரத்துக்குள் கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டருக்கு மாவட்ட ஆட்சியரே நேரடியாக தகவல்களை அனுப்பி, அவர்கள் மூலம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்க முடியும். நிர்வாகத் திறன் உள்ள அரசு என்றால், இதை தான் செய்திருக்கும். ஆனால், அப்படி எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதற்கு காரணம், அணை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை திறக்கப்படவில்லை.
திமுக அரசு தனது அதிகார பலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தி, ‘சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் வெள்ள பாதிப்பு’ என்ற உண்மையை மறைக்கப் பார்க்கிறது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திடீரென நள்ளிரவில் திறக்கப்பட்டதால் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதிமுகவை மிகக் கடுமையாக திமுக விமர்சித்தது. அதிமுகவுக்கு ‘செம்பர்ம்பாக்கம் ஏரி’ என்றால், இப்போது திமுகவுக்கு, ‘சாத்தனூர் அணை’.
முன்கூட்டியே சாத்தனூர் அணை திறக்கப்படாததற்கும், திடீரென திறக்கப்பட்டு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கும் திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரை நூற்றாண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவமும், கால் நூற்றாண்டு கால நிர்வாக அனுபவமும் கொண்டவர். அந்த அனுபவம் தந்த மேதாவித்தனத்தில் சாத்தனூர் அணை பற்றிய உண்மைகளை மறைக்கலாம். ஆனால், இந்த தொழில்நுட்ப யுகத்தில் உண்மை வென்றே தீரும். மக்கள் உண்மையை நன்கறிவார்கள். அதற்கான தண்டனையை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தருவார்கள். சாத்தனூரில் அணை திடீரென திறக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT