Published : 04 Dec 2024 01:50 PM
Last Updated : 04 Dec 2024 01:50 PM
தங்களை வாழவைக்கும் தலைவர்களை தாஜா செய்ய அடிப்பொடிகள் ஆடம்பரமாக பேனர்களை வைப்பதும், விளம்பரங்களை எழுதுவதும், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள் கொடுப்பதும் இந்திய அரசியலில் ஊறிப்போன சமாச்சாரம். இதில், கம்யூனிஸ்ட் தோழர்கள் கொஞ்சம் விதிவிலக்கானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், அதையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் த.தங்கமணி. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் உற்ற தோழரான அமைச்சர் அன்பில் மகேஸ் டிசம்பர் 2-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதற்காக, திமுகவில் இருக்கும் அவரது விசுவாசிகள் ஆங்காங்கே மெகா சைஸ் வாழ்த்துப் போஸ்டர்களை ஒட்டி கொண்டாட்டமானார்கள். திருச்சியிலும் சென்னையிலும் இந்த போஸ்டர் மேளா கொஞ்சம் தூக்கலாகவே தெரிந்தது. இதெல்லாமே ஆளும் கட்சிக்காரர்கள் அமைச்சருக்காக அடித்து ஒட்டிய போஸ்டர்கள். இதிலொன்றும் பிரமாதமில்லை. ஆனால், இந்த போஸ்டர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு மணப்பாறை நகரில் அன்பில் மகேஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் பதாகைகளை திரும்பிய பக்கமெல்லாம் வைத்து திகைக்க வைத்திருக்கிறார் செஞ்சட்டைத் தோழரான தங்கமணி.
தங்கமணியும் அவரது மனைவி மனோன்மணியும் மணப்பாறை நகராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள். தங்கமணியின் அண்ணன் த.இந்திரஜித் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில கிளர்ச்சி பிரச்சாரக் குழு உறுப்பினராகவும் விவசாய சங்க மாநில துணைச் செயலாளராகவும் இருக்கிறார். ஆக, தங்கமணியின் குடும்பமே கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த குடும்பம். திருச்சி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்ததில் இந்திரஜித்துக்கு முக்கிய பங்கு உண்டு என்பார்கள்.
இப்படியாகப்பட்ட நிலையில், திமுக அமைச்சருக்கு தோழர் தங்கமணியும் அவரது மனைவி மனோன்மணியும் சேர்ந்து திமுக கலரில் வைத்துள்ள பிறந்த நாள் வாழ்த்துப் பதாகைகள் திமுகவினரையே திகைக்க வைத்திருக்கிறது. கலர் கலர் சட்டையில் தம்பதி சமேதராய் தங்கமணி வைத்த பதாகைகளை பார்த்துவிட்டு, “கட்சிமாறிவிட்டாரா காம்ரேட்?” என்று கமென்ட் அடித்தார்கள் மணப்பாறை மக்கள்.
மணப்பாறையில் ‘வெற்றி கல்விக் குழுமம்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் தங்கமணி. அன்பில் மகேஸ் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வைத்த பதாகைகள் அனைத்திலும் கல்விக் குழுமத்தின் தாளாளர் என்ற அடையாளத்தை மட்டுமே போட்டிருந்த தங்கமணி, மறந்தும் கம்யூனிஸ்ட் தோழர் என்ற அடையாளத்தை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளவில்லை.
இதுகுறித்து தங்கமணிக்கு நெருக்கமான தோழர் ஒருவரிடம் கேட்டபோது, “ஒரு வகையில அன்பிலார் குடும்பத்துக்கு உறவுக்காரர் தான் தங்கமணி. அவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது அன்பில் மகேஸ் தான் சில உதவிகளைச் செய்துள்ளார். அந்த நன்றிக்காகவும் அன்பிலார் குடும்பத்தினர் மீது தங்கமணி குடும்பத்தினர் வைத்துள்ள பற்றை வெளிப்படுத்தும் வகையிலும் அமைச்சர் அன்பில் மகேஸ் பிறந்த நாளுக்கு தங்கமணி பதாகைகளை வைத்திருக்கிறார்” என்றார்.
தோழர் தங்கமணியோ, “அமைச்சர் அன்பில் மகேஸ் எனது நெருங்கிய உறவினர். நான் எனது தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் அவரது பிறந்த நாளுக்கு பேனர் வைத்தேன். இதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்பில்லை. அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே இதைச் செய்தேன்” என்றார். என்னதான் இருந்தாலும் பாட்டாளி தோழருக்கு இது கொஞ்சம் ஓவர் தான் காம்ரேட்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT