Published : 04 Dec 2024 09:18 AM
Last Updated : 04 Dec 2024 09:18 AM

புயல் பாதிப்புக்கு ரூ.2,000 வழங்குவது ஏற்புடையது அல்ல: கடலூரில் அண்ணாமலை கருத்து

கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

கடலூர்/விழுப்புரம்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட திடீர்குப்பம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், “சாத்தனூர் அணை திறப்பதில் அரசு எந்தவித முன் ஜாக்கிரதையும் மேற்கொள்ளவில்லை. அதனால் கடலூரில் பெரும் சேதம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. மிக்ஜாம் புயலுக்கு ரூ.6,000 வழங்கிய தமிழக அரசு, ஒரே அளவு மழை புயலுக்கு வித்தியாசம் ஏன்? இழப்புகளின் கணக்கின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,500 வழங்க வேண்டும். மத்திய அரசு கடந்த மாதம் வரை ரூ.944 கோடி மாநில அரசுக்கு தந்துள்ளது. அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் மக்கள் எவ்வாறு கோபத்தை காண்பிப்பது? முதல்வர் நிதி கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் தற்போது ரூ.1,500 கோடி அளவிற்கு தமிழக அரசிடம் நிதி உள்ளது.

அதனை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி தேவையென்றால் மத்திய அரசு தரும். டெல்லி சென்று பாதிப்பு குறித்து பிரதமரிடமும், கட்சி தலைவர் நட்டாவிடமும் தெரிவிப்போம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பேரிடர்களில் சிக்கும் கடலூர் மாவட்டத்திற்கு சிறப்பு நிதி உருவாக்க வேண்டும். இது நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும்” என்றார்.கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

விழுப்புரம்: இதற்கிடையில் மரக்காணத்தில் பாதிக்கப்பட்ட உப்பளங்கள், இறால் பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கால்வாய்களை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. போதிய அறிவிப்பு இல்லாமல் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதுதான் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு காரணம்.

சாத்தனூர், பவானி சாகர், அமராவதி உள்ளிட்ட அணைகள் தூர்வாரப்படும் என தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் 2023 மே மாத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கூட ஆளும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழக அரசு கால்வாய்களை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவற்றை செய்யாத வரை தமிழகத்தில் இதுபோன்ற வெள்ளப் பாதிப்புகள் தொடரும். நிதி வழங்கவில்லை என மத்திய அரசு மீது பழிபோடக்கூடாது. நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்வோம்.

வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளப் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்த பின்னர் தேசிய பேரிடர் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை விடுவிக்கும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x