Published : 04 Dec 2024 06:12 AM
Last Updated : 04 Dec 2024 06:12 AM
சென்னை: மாற்றுத் திறனாளி இசைக் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணை இசைத் திருவிழா மியூசிக் அகாடமியின் சிற்றரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
‘தி இந்து’ குழும பதிப்பகத்தின் இயக்குநரும், மியூசிக் அகாடமியின் தலைவருமான என்.முரளி விழாவைத் தொடங்கிவைத்து பேசியதாவது: ஸ்டெர்லிங் நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கம் மெட்ராஸ் கோர மண்டல் முன்முயற்சியில் இந்த இணை இசைத் திருவிழா நடக்கிறது. விருது பெற்ற கலைஞர்களை தேர்ந்தெடுத்திருக்கும் ரோட்டரி சங்கம் மெட்ராஸ் கோரமண்டலுக்கும், கர்ண வித்யா அறக்கட்டளைக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இணை இசைத் திருவிழா கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த இணை இசைத் திருவிழாவின் மூலம் பல்வேறு தடைகளைத் தாண்டி இசைத் துறையில் சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் கலைஞர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. மிகுந்த தன்னம்பிக்கையுடன் இசைத் துறையில் அவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அசாத்தியமானவை என்றார்.
விழாவில் சிறப்பு கவுரவ விருந்தினராக பங்கேற்ற மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் டி.எம். கிருஷ்ணா, “எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளி இசைக் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். அவர்களின் இசையை மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் மாற்றுத் திறனாளி இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வாய்ப்பாட்டுக் கலைஞர் எஸ்.ஆர். கிருஷ்ண மூர்த்தி (2021), மிருதங்க வித்வான் குருவாயூர் துரை (2023), வாய்ப்பாட்டுக் கலைஞர், வயலின் வித்வான் பேராசிரியர் பி.பி.ராம கிருஷ்ணன் (2024) ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. மிருதங்க வித்வான் வலங்கைமான் தியாகராஜன், வயலின் விதூஷி கோவை எஸ்.உஷா ஆகியோருக்கு மேன்மை பொருந்திய இசைக் கலைஞர் விருது (2023) வழங்கப்பட்டது.
வாய்ப்பாட்டு மற்றும் வயலின் கலைஞர் அக் ஷயா பார்த்தசாரதி, வயலின் மற்றும் பியானோ கலைஞர் ஜோதி கலை ஆகியோருக்கு நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர் விருது (2023) வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கம் மெட்ராஸ் கோரமண்டல் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் ரங்கராஜன் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் செயலாளர் கவிதா ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT