Published : 04 Dec 2024 06:10 AM
Last Updated : 04 Dec 2024 06:10 AM
சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று (டிச.4) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னையில் 38 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, செயல்படுகிறது.
கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ரயில்வே வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வந்தன.
தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத் தேர்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிங்சங்கங்களின் இறுதிப்பட்டியலை தெற்கு ரயில்வே கடந்த மாதம் வெளியிட்டது. இதில், தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிங்சங்கங்கள் இடம்பெற்றன. இச்சங்கங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் ரயில்வே ஊழியர்களிடம் வாக்கு சேகரித்துவந்தனர்.
இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் இன்று (டிச.4) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. 3-வது நாளில் ரயில் ஓட்டுநர், கார்டுகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 38 வாக்குசாவடிகள் உள்பட தெற்கு ரயில்வேயில் 140 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணி்க்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு டிச.12-ம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்த வாக்காளர்களில் 30 சதவீத வாக்குகளை பெறும் சங்கத்துக்கு ரயில்வே அங்கீகாரம் கிடைக்கும். இந்த சங்கம், ரயில்வே தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக நிர்வாகத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 15 சதவீத வாக்குகள் பெறும் சங்கத்துக்கு கூட்டம் நடத்தவும் , செய்தி பலகை வைக்கவும் அனுமதி கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT