Last Updated : 03 Dec, 2024 09:44 PM

 

Published : 03 Dec 2024 09:44 PM
Last Updated : 03 Dec 2024 09:44 PM

தென்பெண்ணை ஆறு வெள்ளம்: திருவெண்ணைநல்லூர், பண்ருட்டியில் கடும் பாதிப்பு

மலட்டாற்று வெள்ளத்தால் திருவெண்ணைநல்லூர் குடியிருப்பு முன் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம் மணலில் புதைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி: சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியான திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

சாத்தனூர் அணை திறப்பால் திங்கள்கிழமை தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தென்பெண்ணையாற்று, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் தென்பெண்ணையாற்றில் திருக்கோவிலூர் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து மலட்டாறு பிரிகிறது. இந்த மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரசூரில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டது.

மலட்டாற்றுப் பாதையான திருவெண்ணைநல்லூரில் வெள்ளநீர் புகுந்தததால் மண் அரிப்பு ஏற்பட்டு, திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் சுற்றுச்சுவர் முற்றிலும் விழுந்தது. திருவெண்ணைநல்லூர் - விழுப்புரம் சாலை துண்டிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தால் பலரது வீடுகள் சுவர் இடிந்து சேதமானது.

மலட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட விழுப்புரம்-திருவெண்ணைநல்லூர் சாலை

குடியிருப்புகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளநீர் வேகத்தால் மணல் செருகி புதைந்தது. விளைநிலங்களை மண்மூடி பயிர்கள் சேதமடைந்துள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் செல்போனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

இதேபோன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராசாபாளையம், ஏரிப்பாளையம், கட்ட குச்சிபாளையம், திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், பெரிய கள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலும் வெள்ள நீர் புகுந்ததில் விளை நிலங்களிலும், சாலைகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்புக்குள்ளான திருவெண்ணைநல்லூர் பகுதியில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிப்புக்குள்ளான பகுதியில் பண்ருட்டி வட்டாட்சியர் ஆனந்த் தலைமையிலான வருவாய் துறையினர் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x