Published : 03 Dec 2024 08:30 PM
Last Updated : 03 Dec 2024 08:30 PM
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 2.80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 140 ராணுவ வீரர்கள், 4,000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும். 361 பேர் புயல் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளன. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5,527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
500-க்கும் மேற்பட்ட மரங்களும், 400 மின் கம்பங்களும், 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இது தவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.
இது வரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 2.75 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது என்று புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT