Published : 03 Dec 2024 05:01 PM
Last Updated : 03 Dec 2024 05:01 PM

‘வெள்ள நிவாரணத்தை உயர்த்துக’ - சாத்தனூர் அணை விவகாரத்தை முன்வைத்து இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக பருவ மழை மற்றும் ஃபெஞ்சல் புயலினால் தொடர்ந்து கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசு, எவ்வளவு புயல், மழை வந்தாலும் தடுப்பு நடவடிக்கைகள் தயார் என்று ஊடகங்களில் வெற்று விளம்பரங்கள் செய்ததை நம்பி இன்று, லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஃபெஞ்சல் புயல்’ காரணமாக கன மழை பெய்யும் என்று தொடர்ந்து பல்வேறு எச்சரிக்கைகளை உடனுக்குடன் வெளியிட்டு, மாநில அரசை எச்சரித்து வந்தது. ஆனால், நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசு, வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் செய்த மாவட்டங்களில் எந்தவிதமான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமலும், நிவாரண முகாம்களை அமைக்காமலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்தது.

இதன் விளைவாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த மூன்று நாட்களாக கனமழை, வெள்ளத்தால் தங்களது விளை நிலங்கள் சேதமடைந்ததோடு, தங்களது உடைமைகள், கால்நடைகள் மற்றும் வாகனங்களை இழந்து, உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசு, சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருந்த போதே, தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். குறிப்பாக, டிச.2-ம் தேதியன்று அதிகாலை 2.30 மணியளவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டபடியால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இன்று தங்களது வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் நிற்கதியாக உள்ளனர். விழுப்புரம் நகரம் மற்றும் கடலூர் நகரங்களில், தென்பெண்ணையாற்றின் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்ளுக்கு ரெட் அலர்ட் வெளியிட்ட பிறகும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் எவ்வளவு மழை பெய்தாலும், அதை எதிர்கொண்டு மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியிட்டார். ஆனால், சென்னையைத் தவிர்த்து வேறு எந்த மாட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இனியாவது மக்களை ஏமாற்றாமல், இந்தியா வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடைகள், வாகனங்களை இழந்துள்ளவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மேலும், வெள்ளத்தால் மூழ்கி பாதிப்படைந்த நெல் மற்றும் பல்வேறு பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மீண்டும் ஒருமுறை, தான் நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார். உடனடியாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கவும்; மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றவும், ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, “சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். அதன் விவரம்: சாத்தனூர் அணை திறப்பால் 4 மாவட்டங்கள் பாதிப்பு: ரூ.25,000 நிவாரணம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

இதனிடையே, “சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள்” என்று கூறி, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம்: சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி: துரைமுருகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x