Published : 03 Dec 2024 04:19 PM
Last Updated : 03 Dec 2024 04:19 PM
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் மழை தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டித்தீர்த்ததால் நகர பகுதி மற்றும் கிராமப் புறங்கள் வெள்ளக்காடானது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது. இருப்பினும் கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடியது. சாத்தனூர் அணை நிரம்பிய நிலையில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புதுச்சேரிக்கு 2.20 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் பாகூர் அருகே அழகி நத்தம் தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு, கொம்மன்நாத்மேடு தடுப்பணைகள் மூழ்கி தண்ணீர் ஆர்பரித்தது. இதனால் ஆற்றின் கரைக்கு மேலாக தண்ணீர் ஏறியதுடன், சில இடங்களில் ஆற்றின் கரை பகுதியும் உடைந்து கரை ஓரங்களில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இந்த திடீர் வெள்ளத்தால் சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், பாகூர், இருளன்சந்தை, கொம்மந்தான்மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அந்த பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்கள் மற்றும் அரசு பள்ளிகள், தனியார் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், சிலர் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்றனர். தற்போது ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கெனவே சில கிராமங்களில் உட்புகுந்த மழை வெள்ள நீரின் வேகம் குறைந்துள்ளது. ஆனாலும் பல கிராமங்களில் 2-வது நாளாக தொடர்ந்து வெள்ளநீர் வந்த வண்ணமே உள்ளது. தண்ணீர் குறைந்த பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் நிவாரண முகாம் உள்ளிட்ட இடங்களில் 1000 பேர் வரை உள்ளனர். தொடர்ந்து வெள்ளநீர் கிராமங்களுக்குள் வந்து கொண்டிருப்பதால் மக்கள் கடந்த 3 தினங்களாக மின்சாரம், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சேலியமேடு உள்ளிட்ட இடங்களில் டிராக்டர் டேங்க் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசு மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள் இளைஞர்களின் உதவிகளை செய்தாலும், இன்னும் பல மக்களுக்கு உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. ஆற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீரானது சேலியமேடு, அரங்கனூர், குமாரமங்கலம் பகுதி வரை வயலில் புகுந்து பாகூர் - கரிக்கலாம்பாக்கம் சாலையை கடந்து ஆறு போல ஓடுகிறது.
மேலும் ஆற்று வெள்ளநீர் மட்டுமின்றி பாகூர் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அதில் இருந்தும் உபரி நீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் உள்ள ஓடை மற்றும் வாய்க்காலில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு டி.என்.பாளையம், மேல் அழிஞ்சபட்டு, கரிக்கன் நகர், ரெட்டிச் சாவடி பகுதிகளில் உள்ள நிலத்திலும், வீடுகளிலும் இன்று காலை முதல் தண்ணீர் புகுந்து கடலூர் - புதுச்சேரி சாலை வழியாக கடந்து செல்கிறது.
பாகூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் சித்தேரி, மணப்பட்டு, காட்டுக்குப்பம் ஏரி வழியாகவும் பிரிந்து முள்ளோடை பகுதியில் சாலையோர வாய்க்கால் வழிந்தோடி கடலூர் - புதுச்சேரி சாலையை கடந்து செல்கிறது. இதனால் முள்ளோடை, பரிக்கல்பட்டு, மதி கிருஷ்ணாபுரம், கன்னியகோயில், பள்ளக்கொரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
ஏற்கெனவே சின்னகங்கனாங்குப்பம் பகுதியில் கடலூர் - புதுச்சேரி சாலையில் வெள்ளநீர் ஓடியதால் இச்சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் - புதுச்சேரி வழித்தடத்தில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. முள்ளோடை பகுதியில் உள்ள தானியங்கி துணை மின் நிலையத்திலும தண்ணீர் புகுந்தது. இதனால் மின்சாரம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதேபோல் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருக்கும் ஓடை மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி ஒட்டிய நீர்வரத்து வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி வழிவதால் அந்த பகுதிகள் மற்றும் ரெட்டிச்சாவடி காவல் நிலையம் அருகே கடலூர் - புதுச்சேரி சாலையின் குறுக்கே தண்ணீர் ஓடுகிறது.
இதனால் அந்த பகுதிகளிலும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அங்கனூர் - கீழ் குமாரமங்கலம் செல்லும் சாலையில் தண்ணீர் ஓடுவதால் அச்சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல இடங்களிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT