Published : 03 Dec 2024 04:05 PM
Last Updated : 03 Dec 2024 04:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய ராணுவம் கூடுதலாக நான்கு குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதியில் இருந்து இரண்டு குழுக்கள் கடந்த டிச.1ம் தேதி முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் பிரிவைச் சேர்ந்த 66 பேர் கொண்ட மற்றொரு குழு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருட்களுடன் சென்னை வந்தடைந்தது. இக்குழு எப்போது தேவைப்பட்டாலும் புதுச்சேரி செல்லும் வகையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று இந்திய ராணுவத்தின் சார்பில் மீட்புப் பணியில் ஏற்கெனவே ஈடுபட்டுவரும் இரண்டு குழுக்களின் தலைவர்கள் மற்றும் NDRF-பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்துடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, ராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மேலும் சில பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேஜர் அஜய் குமார் சங்வான் தலைமையில் 61 ராணுவ வீரர்கள் அடங்கிய முதல் குழு, ஏம்பலத்தில் உள்ள கம்பளிக்காரன் குப்பத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. மேஜர் சோலார் மணி பிரதானின் கீழ் இயங்கும் இரண்டாவது குழு, பாகூருக்கு அருகிலுள்ள கரையாம்புத்தூரில் மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இந்திய ராணுவத்தின் 16-மெட்ராஸ் பிரிவின் கமாண்டிங் அதிகாரி, சிவில் நிர்வாகத்துடனும் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வரும் ராணுவ வீரர்களுடனும் தொடர்பு கொண்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளின் முதல் இரண்டு நாட்களில், புதுச்சேரியில் உள்ள கிருஷ்ணா நகர், குபேர் நகர், ஜீவா நகர் மற்றும் என்ஆர் நகர் ஆகிய பகுதிகளில் சிக்கித் தவித்த 1000-க்கும் மேற்பட்டோர் இந்திய ராணுவ வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது அணைகள் திறப்பு பாதிக்கப்பட்டுள்ள கிராமப் பகுதிகளில் பணிகளை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT