Published : 14 Apr 2014 10:37 AM
Last Updated : 14 Apr 2014 10:37 AM

மீனவர்கள் மோதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினை காரணமாக நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அருகில் உள்ள மாங்கோடு கிராம மீனவர்கள் மீது கடந்த 12-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாங்கோட்டில் சுமார் 60 குடியிருப்புகள் சேதமடைந்ததையும், 48 மீன்பிடி படகுகள் தீ வைக்கப்பட்டதையும் அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

இந்த தாக்குதலில் வீடுகளையும் படகுகளையும் இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள் கிறேன். பாதிக்கப்பட்டவர்களை உரிய பாதுகாப்போடு தங்க வைக்கவும் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர விட்டுள்ளேன்.

மேலும், இந்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். இச் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆய்வாளர் ராஜா ராபர்ட், சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நான் உத்தரவிட் டுள்ளேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகள் மற்றும் படகுகளின் சேதாரங்களை மதிப்பீடு செய்து, உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தர விட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x