Published : 03 Dec 2024 03:31 PM
Last Updated : 03 Dec 2024 03:31 PM
கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பில் சூழ்ந்த மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது.
சாத்தனூர் அணையில் நேற்று (டிச.2) வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாழங்குடா குண்டு குப்பளவாடி, பெரிய கங்கணாங்குப்பம் சின்ன கங்கணாங்குப்பம், திடீர் குப்பம் எம்ஜிஆர் நகர் செம்மண்டலம் வெளிச்சமண்டலம் உண்ணாமலை செட்டி சாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது.
வெள்ள நீரில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, போலீசார் தன்னால் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் படகு மூலமும் கயிறு கட்டியும் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கக்கன் தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், எஸ்பி ராஜாராம், நீர்வளத்துறை செயற் பொறியாளர்கள் சிதம்பரம் காந்தரூபன், விருத்தாசலம் அருணகிரி மற்றும் வருவாய், போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டு இன்று (டிச.3 )வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தென்பெண்ணை வெளியேற்றப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நகர் பகுதிகளிலும் கிராமங்களிலும் புகுந்த வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது. கடலூர்- புதுச்சேரி சாலையில் முள்ளோடை பகுதியில் சாலையில் வெள்ளநீர் செல்வதால் புதுச்சேரி- கடலூர் சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 3,421 குடும்பங்களைச் சேர்ந்த 5,444 ஆண்களும் 6,306 பெண்களும் 863 குழந்தைகள் என மொத்தம் 12,613 நபர்கள் மீட்கப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23,638 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT