Published : 03 Dec 2024 01:57 PM
Last Updated : 03 Dec 2024 01:57 PM
வேலூர்: சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்ட குற்றச்சாட்டில் ”அதிமேதாவிகளுக்கு அறிக்கை விட்டிருக்கிறேன்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் விஐடி அண்ணா கலையரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா இன்று (டிச.3) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில், 129 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஊனமுற்றோர் என்ற வார்த்தை என் உள்ளத்தை வருத்துவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். இதற்காகத்தான் மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றினார். மாற்றுத்திறனாளிகள், தொழுநோயாளிகள், பிச்சை எடுப்பவர்கள், கண் பார்வையற்றோர் என பல தரப்பினருக்கும் உதவிகளை செய்தவர் கருணாநிதி.
இன்று காலை ரயிலில் வரும் போது ‘தி இந்து’வில் வந்த கட்டுரையை படித்தேன். அதில், மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று எழுதி இருந்தனர். இதில், எனக்கும் மகிழ்ச்சி. உடலுறுப்பு மாற்றுத்திறனாளிகள் கூர்மையான புத்தி உடையவர்கள்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தபோது, "தமிழக மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ரூ.2000 கோடிக்கு நிவாரணம் வழங்க குழுவை அனுப்பும்படி மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசும் பெரும் இடர்பாடுகளுக்கு செவிசாய்ப்பார்கள் என நம்புகிறோம். சாத்தனூர் அணை திறப்பு குறித்து சொன்ன அதிமேதாவிகளுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறேன்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
முன்னதாக, சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனுசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT