Last Updated : 03 Dec, 2024 02:47 PM

 

Published : 03 Dec 2024 02:47 PM
Last Updated : 03 Dec 2024 02:47 PM

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட படகுகள்: முற்றிலும் சேதமடைந்த புதுச்சேரி அரசு படகு குழாம்

புதுச்சேரி: சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் நோணாங்குப்பம் அரசு படகு குழாம் புயல் மழையால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. வெள்ளத்தில் பல லட்சம் மதிப்பிலான படகுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த பிறகே முழு சேதமதிப்பு தெரியும் என துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா நகரான புதுச்சேரியில் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் நோணாங்குப்பம் படகு துறை நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ளது. படகு குழாமில் இருந்து படகுகளில் பாரடைஸ் பீச் என அழைக்கப்பட்டுள்ள இந்த படகுத்துறைக்கு ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட், ஃபெராரி ரைட் என பல வகையான படகுகளில் பயணிகளை அழைத்து செல்வர். இங்கு படப்பிடிப்புகளும் நடப்பது வழக்கம்.

இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் 80 பேர் சவாரி செய்யும் பெரிய படகு உள்ளது. அத்துடன் 40 பேர் சவாரி செய்யும் படகு, 35 பேர், 25 பேர் சவாரி செய்யும் இரண்டு படகுகள், 20 பேர் சவாரி செய்யும் ஐந்து சிறிய படகுகளும் இயங்கி வருகிறது. சுமார் 2 கோடி மதிப்பில் மாடி வசதியுடன் 90 பேர் பயணிக்கும் படகு, 80 பேர் பயணிக்கும் படகும் வாங்கி அவை பயன்படுத்த முடியாததால் நிறுத்தப்பட்டிருந்தன.

வார விடுமுறை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் கூட்டம் அதிகளவில் இங்கு அலைமோதும். பல கோடி வருவாய் தரும் படகு குழாம் தற்போது புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. புதுச்சேரியில் புயல் மழையால் நகரப் பகுதிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. அதே நேரத்தில் அணைகள் திறப்பால் புதுச்சேரி கிராமப் பகுதிகள் கடும் பாதிப்பில் உள்ளன. தற்போது நோணாங்குப்பம் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கால் நோணாங்குப்பம் படகு துறை முற்றிலும் மூழ்கி விட்டது.

வெள்ளம் அதிகளவில் வந்ததால் படகுகள் அடித்து செல்லப்பட்டன. படகுதுறை இருந்த அடையாளமே தெரியவில்லை. பாரடைஸ் பீச்சே இல்லை. அங்குள்ள ரெஸ்டாரண்டில் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்கின்றனர். ஆற்றில் ஒரு படகு மரக்காணத்தில் மீட்டுள்ளனர். அதை சீரமைத்து வருகின்றனர்.

இதுபற்றி சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "வெள்ளப்பெருக்கால் படகு துறையில் ஆறு படகுகள் அடித்து போய்விட்டன. இதன் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும். படகு குழாம், அங்குள்ள ரெஸ்டாரண்ட், படகில் இருந்து இறங்கு தளம் என அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு தான் முழு சேத மதிப்பு தெரியவரும்" என்றார். தற்போது நோணாங்குப்பம் படகு துறை இயங்கும் நிலையில் இல்லாததால் அது செயல்பட ஒரு வாரத்துக்கு மேலாகும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x