Published : 03 Dec 2024 03:19 PM
Last Updated : 03 Dec 2024 03:19 PM
புதுச்சேரி: புதுச்சேரி கூட்டணி அரசில் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் மத்திய அரசிடமிருந்து போதிய நிவாரண நிதியை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக வீடுர், சாத்தனூர் அணைகளின் நீர் திடீர் திறப்பால் சங்காரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு புதுச்சேரி கிராமப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின வெள்ளத்தினால் பாகூர், இருளன் சந்தை, குருவிநத்தம், சோரியாங்குப்பம், கொம்பந்தான் மேடு, ஆராய்ச்சிக்குப்பம், மணமேடு, கடுவனூர், பரிக்கல்பட்டு மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நோணாங்குப்பம், என்.ஆர். நகர், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் அணை நீர் உட்புகுந்து பெருத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியிலும் பாகூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், உபயோக பொருட்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பாகூர் சட்டமன்ற தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் கூறியதாவது: பாஜக , என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலத்தில் புயல் நிவாரண அறிவிப்பில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு சம்பந்தமில்லாதது போன்று பாஜகவின் செயல்பாடு இருந்தது. அரசின் நிர்வாகத்தில் இணைந்து செயல்படும் பேரவைத் தலைவர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், முதல்வரின் நிவாரண உதவி அறிவிப்பை புறக்கணித்திருப்பது உச்சக்கட்ட மோதல் போக்கின் வெளிப்பாடாக தெரிகிறது.
கூட்டணி அரசில் இது போன்ற மோதல் போக்கால், மத்திய அரசிடமிருந்து போதிய நிவாரண நிதியை பெறுவதில் தாமதம் ஏற்படலாம். புதுச்சேரி மாநிலத்தில் புயல், பெருவெள்ளத்தால் பாதித்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ரூ.5000 நிவாரண உதவி, முதல்வர் ரங்கசாமியால் அறிவிக்கப் பட்டுளள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதே நேரத்தில் புயலால் பாதிக்கப் பட்டு ஆற்றுத் தண்ணீரும், மழை நீரும் வீடுகளுக்குள் உட்புகுந்து தங்களது உடைமைகளை இழந்தவர்களுக்கான நிவாரண உதவியை முதல்வர் உயர்த்தி வழங்க வேண்டும்.
நகரின் பிரதான இரண்டு கழிவு நீர் வாய்க்கால்கள் உடைப்பை சரிசெய்யாமலும், முன்னெச்சரிக்கையாக வாய்க்கால்கள் பராமரிப்பை செய்யாமல் பொதுப்பணித் துறையின் புறக்கணிப்பால், நகரின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோரது வீடுகளில் மழைநீர் உட்புகுந்து அவர்களது உடைமைகளை இழந்துள்ளனர். அதனால், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.25,000 நிவாரண உதவித் தொகையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT