Published : 03 Dec 2024 09:24 AM
Last Updated : 03 Dec 2024 09:24 AM

தி.மலை மண் சரிவு பேரிடருக்கு தீர்வு என்ன? - துணை முதல்வர் உதயநிதி பதில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவு பேரிடருக்கு தீர்வு என்ன என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, திங்கள்கிழமை மாலை தி.மலையில் நடந்த மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனால் ஒன்றரை கோடி பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சாலைகள், பாலங்கள் என ஏராளமான முக்கிய கட்டுமானங்கள், உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த மிகப் பெரிய பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு, தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று நம்முடைய முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றோம். பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமைசென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தோம். திங்கள்கிழமை, முதல்வர் உத்தரவின் பேரில், மதியம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஆய்வை முடித்துவிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தந்து ஆய்வு செய்துள்ளோம்.

கனமழையால், தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு சோகமான சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. திருவண்ணாமலையில் வ.உசி நகர் 11- வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது தொடர் கனமழை காரணத்தால், மலையிலிருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதில், அவருடைய வீடு, மண் மற்றும் பாறையால் முழுவதுமாக மூடப்பட்டு புதையுண்டது.

இந்த வீட்டிற்குள் இருந்த ராஜ்குமாரின் மனைவி மீனா (வயது 27), அவரது 8 வயது மகன் கௌதம், 5 வயது மகள் இனியா, அவர்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயதான ரம்யா, 14 வயது நிரம்பிய விநோதினி மற்றும் 7 வயதான மகா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளார்கள். எப்படியாவது நல்ல செய்தி வரும், 7 பேரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்த்தோம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், மண்ணில் புதைந்த வீட்டில் சிக்கியவர்கள் உயிரிழந்தனர்.

கனமழையால் மலையிலிருந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறை சரிவில் சிக்கி 7 உயிர்கள் பறிபோயிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். அவர்களின் மரணத்துக்கு என்னுடைய இரங்கலை அரசு சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், அவர்களின் உறவினர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாடு முதல்வர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூபாய் 5 லட்சத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லியிருக்கின்றேன்.

மேலும், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்படுவதால், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். சென்னை ஐ.ஐ.டி இருந்து மண் (சாயில்) டெஸ்ட் எடுக்க ஐஐடி டெக்னீசியன் மோகன், பூமிநாதன் வந்துள்ளனர். அவர்கள் மண்ணின் தரத்தை ஆய்வு செய்வார்கள். ” என்று கூறினார்.

மேலும், இதேபோன்று பேரிடர் மீட்பில் நடக்குது. மழையால் நாம் கணிக்க முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மலையை சுற்றியுள்ள பொதுமக்கள் கேட்பது வேறு இடங்கள், அடுக்குமாடி...” என்று செய்தியாளர்கள் வினவியபோது, “வெளியே வருவதற்கு அவர்கள் தயாராக இருந்தால், மாற்று ஏற்பாடு செய்வோம்” என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x