Published : 03 Dec 2024 06:29 AM
Last Updated : 03 Dec 2024 06:29 AM

போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை கடும் ஆட்சேபம்

உணவுப் பொருட்கள் பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருட்களை கடத்திய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தி்ல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவருடைய தம்பி முகமது சலீமையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக், முகமது சலீம் இருவரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிஐ நீதிபதி எழில்வேலவன் முன்பாக நிலுவையில் இருந்து வருகிறது. அவர்களின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ராகுல் வர்மா சார்பில் அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

உணவுப் பொருட்களின் பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளனர். இதன்மூலம் கிடைத்த பெரும் தொகையை கொண்டே திரைப்படத்துறையிலும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பினாமி நிறுவனங்களிலும் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். சட்டவிரோதமாக ஈட்டிய தொகையைக் கொண்டு ரூ.50 கோடிக்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். ரூ. 4.38 கோடிக்கு சொகுசு கார்களை வாங்கியுள்ளார்.

ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபடுவது மட்டுமி்ன்றி, சாட்சிகளை கலைக்கவும், ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் ஆகியோரின் ஜாமீன் மனு, இன்று (டிச.3) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x