Published : 02 Dec 2024 09:34 PM
Last Updated : 02 Dec 2024 09:34 PM
கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,70,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தென்பெண்ணையாற்று பகுதி கரையோரம் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திடீர்குப்பம், எம்ஜிஆர். நகர், தனலட்சுமி நகர், கேடிஆர் நகர், இந்திரா நகர், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், ஆல்பேட்டை, சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம், உப்பலவாடி, ஆல்பேட்டை பாபா நகர், தாழங்குடா, உச்சிமேடு, கண்டக்காடு, ஆயிரம் விளாகம், உண்ணாமலை செட்டிச்சாவடி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் கஸ்டம்ஸ் சாலையிலும், மாவட்ட ஆட்சியர் சாலையிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது.
கடலூர் - புதுச்சேரி சாலையில் வெள்ளநீர் அதிகளவில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளநீரின் அளவு குறைந்தால் மட்டுமே குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீர் வடியும். அதுவரை எந்த பணியும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸார், தீயணைப்புத்துறை வீரர்கள், வருவாய்த்துறையினர், தன்னார்வலர்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்னர்.
கெடிலம் ஆற்றிலும் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் தென்பெண்ணையாற்று தண்ணீர் சாலைக்கு வராமல் இருக்கும் வகையில் மண் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். தென்பெண்ணையாற்று பகுதியைச் சுற்றி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT