Published : 02 Dec 2024 08:12 PM
Last Updated : 02 Dec 2024 08:12 PM
புதுச்சேரி: வீடுர், சாத்தனூர் அணைகள் திறப்பால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ள நீர் புதுச்சேரியில் 25-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்பகுதிகளை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். வெள்ளத்தில் சிக்கிய நான்கு போலீஸாரை தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்டது.
தமிழக பகுதிகளில் பெய்யும் மழை புதுச்சேரியை வந்தடையும். இந்நிலையில் சாத்தனூர், வீடுர் அணைகள் திறப்பால் தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால் சித்தேரி அணைக்கட்டு, கொம்மந்தான்மேடு தடுப்பணை, மணமேடு தடுப்பணைகளில் அதிகளவு வெள்ள நீர் செல்கிறது.
இதனால் கரையோரங்களில் உள்ள ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளஞ்சந்தை, திருப்பனாம்பாக்கம், கொம்மந்தான் மேடு உள்ளிட்ட பல கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக பாகூர் பகுதியே வெள்ளக்காடாகியுள்ளது. இதேபோல் வீடுர் அணை திறப்பால் சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. மணலிப்பட்டு மக்கள் கூனிச்சம்பட்டு கிராமத்துக்கு செல்ல முடியாத வகையில் வெள்ளம் செல்கிறது.
மேலும் செட்டிப்பட்டு, விநாயகம்பட்டு, மணவெளி, காட்டேரிகுப்பம், சந்தை புதுகுப்பம், வாதானூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. தாழ்வான பகுதியில் உள்ளோரை அகற்றும் பணி நடந்தது. மேலும் வில்லியனூர் கணுவாப்பேட்டை, புதுநகரிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் தேசிய பாதுகாப்பு படை, ராணுவம், கடலோர காவல்படை தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மீட்பு பணியில் உள்ளனர்.
கொம்பாக்கத்தில் நெசவாளர் நகரில் கரையோரம் உள்ள வீட்டை வெள்ளம் சூழ்ந்து எதிர்க்கட்சித்தலைவர் சிவா தகவலின்பேரில் பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்து மீட்கப்பட்டனர். மணவெளியில் என்.ஆர் நகரில் ஏராளமான வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
சிக்கிய போலீஸார்: பாகூர் சித்தேரி அணைக்கட்டுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்ற பாகூர் காவல்நிலைய போலீஸார் நால்வர் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு, சம்பவ இடத்திற்கு சென்று நான்கு போலீஸாரை இரண்டு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT