Published : 02 Dec 2024 08:08 PM
Last Updated : 02 Dec 2024 08:08 PM
சேலம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள வசிஷ்ட நதி, சுவேத நதி, திருமணி முத்தாறு, சரபங்கா, பாலாறு என அனைத்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் வசிஷ்ட நதி, சரபங்கா என அனைத்து ஆறுகளிலும் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஆறுகள், ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக, நீர் வரத்து கால்வாய்களில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து உபரிநீரானது ஏரிகள், ஆறுகளில் சென்று கலந்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் இரு கரைகளையும் தொட்டு, வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது.
கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து, ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி, செந்நீராக வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. இதனால், வசிஷ்ட நதியின் படுகையில் உள்ள வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்புவதால் பொதுமக்களும், விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல், கொல்லிமலை சாரலில் உற்பத்தியாகும் சுவேத நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சேர்வராயன் மலைச்சாரலில் உற்பத்தியாகி, சேலம் மாநகர் வழியாக பாய்ந்தோடும் திருமணிமுத்தாற்றில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தோடுவது, சேலம் மாநகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுநாள் வரை, பெரும்பாலான நாட்களில், அதிகளவில் கழிவு நீரை மட்டுமே சுமந்து சென்ற திருமணிமுத்தாறு, ஒரு காட்டாறு போல வேகமெடுத்து பாய்ந்து செல்வதை, நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் மிகுந்த ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். ஓமலூர், எடப்பாடி, காடையாம்பட்டி வட்டாரங்களை செழிப்படைய வைக்கும் சரபங்கா மற்றும் பாலாறு நதிகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டேனீஷ்பேட்டை அடிவாரத்தில், பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக, அதனை ஒட்டிய பகுதியில் இருந்த தென்னை, பாக்கு மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், மாவட்டத்தில் பாசனத்துக்கான நீர் ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT