Last Updated : 02 Dec, 2024 06:23 PM

 

Published : 02 Dec 2024 06:23 PM
Last Updated : 02 Dec 2024 06:23 PM

தென்பெண்ணை வெள்ளப் பெருக்கு: சென்னை - தென் மாவட்டங்களுக்கான சாலைவழி போக்குவரத்து பாதிப்பு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் தென்பெண்ணையாற்று வெள்ள நீர்.

கள்ளக்குறிச்சி: சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையிருந்து, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான சாலைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புயல் புதுச்சேரி மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் கரையைக் கடந்த நிலையில்,திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்ட நிலையில் 1.70 லட்சம் கன அடி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் பாய்ந்தது. இதனால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலப் பகுதிகளையும், சாலையையும் பாதித்துள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் தென்பெண்ணையாற்று வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரக்கு வாகனங்கள்

குறிப்பாக சென்னை - திருச்சி சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், சென்னை-திருச்சி இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றுலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்று வெள்ள நீர் தளவானூர், திருப்பாச்சனூர் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் விக்கிராண்டி- தஞ்சை சாலைப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலில் தென்பெண்ணையாறு கலக்குமிடமான கடலூரிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு,நெல்லிக்குப்பம், முல்லிகிராம்பட்டு, கடலூர் குண்டு உப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம், தாழங்குடா, ஆல்பேட்டை எம்ஜிஆர் நகர், திடீர்குப்பம் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

சாலையைக் கடந்து செல்லும் வெள்ள நீரை பார்வையிடும் கிராம மக்கள்

போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக தென்பெண்ணையாற்று வடிநில கோட்ட செயல் பொறியாளரிடம் கேட்டபோது, நேற்று நள்ளிரவு தான் அணைத் திறக்கப்பட்டதாகவும், 1.70 லட்சம் கன அடி திறந்து விடப்பட்ட தகவலும் கிடைத்தது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, கிராமங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது தண்ணீரின் அளவு 66 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீர் வடிந்து நாளை முதல் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x