Last Updated : 06 Jun, 2018 07:00 PM

 

Published : 06 Jun 2018 07:00 PM
Last Updated : 06 Jun 2018 07:00 PM

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்; எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்: பிரதீபாவின் சகோதரர் வேண்டுகோள்

நீட் தேர்வை அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும். எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரதீபாவின் சகோதரர் பிரவீன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில், 2-வது ஆண்டாக நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு தமிழத்திலிருந்து நீட் தேர்வு எழுதியதில் 40 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 12-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இருப்பினும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில நீட் தடையாக உள்ளது எனக் கூறி அனைத்து அரசியல் கட்சியினரும் குரலெழுப்பி வந்த நிலையில், கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவியும், நீட் தேர்வெழுதியும், அதில் தோல்வியடைந்த விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பிரச்சினை கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கியது.

இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் கிராமைத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 4-ம் தேதி மனமுடைந்து வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அதேபோன்று செஞ்சியை அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா என்ற மாணவி, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், அவரும் நேற்று முன் தினம் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் 2-வது ஆண்டாக நீட் தேர்வினால்,மாணவிகள் தொடர்ந்து தற்கொலைக்கான நடவடிக்கையில் இறங்குவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பெருவளூர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது, மாணவி பிரதீபா வீட்டில் கடைசிப் பெண். அவரது சகோதரர் பிரவீன்ராஜ் மயிலம் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டும், மூத்த சகோதரி உமாப்ரியா எம்சிஏ இறுதியாண்டு படித்து வருகின்றனர்.

மாணவி பிரதீபா கடந்த 2015-16 கல்வியாண்டில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 முடித்து 1125 மதிப்பெண்கள் பெற்ற, அவர் மருத்துவம் பயில்வதற்காக 2016-ம் ஆண்டு முயற்சித்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.5 லட்சம் கேட்டதால், அதற்கு வசதியின்றி மருத்துவம் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு முயற்சித்தபோது நீட் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அதை எதிர்கொண்டு 155 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அப்போதும் அவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் தான் பயிலவேண்டும் என்ற முனைப்புடன் நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு, தேர்வை எதிர்கொண்டுள்ளார். ஆனால் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தனால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவி பிரதீபாவுடன் பயின்ற அதேகிராமத்தைச் சேர்ந்த மாணவி நளினி கூறும்போது, ''நான் தற்போது கலைக் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் பயின்று வருகிறேன். நானும் பிரதீபாவும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்தோம். அவர் யாருடனும் அதிகம் பேச மாட்டார். படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். 10-ம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றார். அவரது சகோதரி உமாப்ரியா அனைவரிடமும் பழகுவது போன்று, இவர் இருக்கமாட்டார். அதிகம் தனிமை விரும்பக் கூடியவர். மருத்துவம் பயில வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டதால் தான் இருமுறை தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கொண்டார். தேர்வில் தோல்வி காரணமாக அவர் எடுத்த முடிவு எங்களை வேதனைக்கு ஆளாக்கியிருக்கிறது. எங்களைப் போன்ற கிராமப்புற மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டாவது அரசு நீட் தேர்வை ரத்து செய்வேண்டும்'' என்றார்.

பிரதீபாவின் சகோதரர் பிரவீன்ராஜ் கூறுகையில், ''மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் எங்கள் வீட்டில் அனைவரும் நன்றாகப் படிப்போம். நானும் எனது மூத்த சகோதரியும் இறுதியாண்டு படித்துவரும் நிலையில், எனது தங்கை இந்த முடிவை மேற்கொண்டது எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே நீட் தேர்வை அரசு முழுமையாக ரத்து செய்யவேண்டும். எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x