Published : 02 Dec 2024 04:34 PM
Last Updated : 02 Dec 2024 04:34 PM

ஊத்தங்கரையில் 50 செ.மீ, கெடாரில் 42 செ.மீ - ஒரே நாளில் எங்கெல்லாம் அதிக மழைப் பதிவு?

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக வடதமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவானது. அம்மாவட்டத்தின் ஜம்புகுட்டப்பட்டி மற்றும் போச்சம்பள்ளியில் தலா 25 செ.மீ மழை பதிவானது. பாம்பார் அணையில் 21 செ.மீட்டரும், பாரூரில் 20 செ.மீ, பெனுகொண்டபுரத்தில் 19 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. | விரிவாக வாசிக்க > கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு - ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் சூரப்பட்டில் 38, விழுப்புரத்தில் 35, செ.மீ மழை பதிவானது. மாவட்டம் முண்டியம்பாக்கம், கோலியனூரில் தலா 32 செ.மீ மழையும் பதிவானது. முகையூர், வளவனூரில் தலா 30 செ.மீ மழையும், நேமூர், கஞ்சனூர், மணம்பூண்டியில் தலா 29 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்ததில் 32 செ.மீட்டர் மழை பதிவானது. மடம்பூண்டியில் 31 செ.மீ, வெங்கூரில் 27 செ.மீ, திருக்கோயிலூரில் 26 செ.மீ, எறையூரில் 23 செ.மீ, மணலூர்பேட்டையில் 21 செ.மீ, சங்கராபுரத்தில் 19 செ.மீ, கள்ளக்குறிச்சியில் 18 செ.மீ, கலயநல்லூரில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. | விரிவாக வாசிக்க > ஏற்காட்டில் ஒரே நாளில் 238 மி.மீ. மழை: மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு

தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ , பாப்பிரெட்டிப்பட்டியில் 20 செ.மீ, மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ, தண்டராம்பேட்டையில் 20 செ.மீ மழையும் பதிவானது. மேலும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 23 செ.மீ மழை பதிவானது. மேலும், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தலா 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | விரிவாக வாசிக்க > தருமபுரியில் பலத்த மழை: பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு - 1,000 ஏக்கர் மரவள்ளி கிழங்கு சேதம்

இந்நிலையில், நேற்று (டிச.1) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், நேற்று மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , இன்று (டிச.2) காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, செவ்வாய்க்கிழமை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக, நாளை (டிச.3) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x