Last Updated : 02 Dec, 2024 03:47 PM

3  

Published : 02 Dec 2024 03:47 PM
Last Updated : 02 Dec 2024 03:47 PM

“2026-ல் நடக்க இருப்பது வாழ்வா, சாவா தேர்தல்” - அண்ணாமலை பேச்சு

சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடக்க இருப்பது வாழ்வா, சாவா தேர்தல். எனவே, தொண்டர்கள் களத்தில் வேகமாக உழைக்க வேண்டும் என கமலாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறியுள்ளார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று கமலாலயம் வந்த அண்ணாமலைக்கு, மேளதாளங்கள் முழங்க தொண்டர்கள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து, தனித்தனியாக அண்ணாமலையை சந்தித்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு, ஆளுயர மாலை அணிவித்து, தலையில் மலர் கிரீடம் வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் வித்தியாசமான சூழல் நிலவுகிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதனால், மக்கள் அனைவரும் பெரிய அளவில் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். எனவே, தான் எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி வேண்டாம், தொண்டர்களை களத்தில் சந்தித்துக்கொள்வோம் என கூறியிருந்தேன்.

நாளை (டிச.3-ம் தேதி) முதல் நானும் களத்துக்கு வருகிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, மூத்த தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து மத்திய அரசுக்கும், பாஜக தேசிய தலைவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் இன்று (டிச.2-ம் தேதி) டெல்டா பகுதிகளுக்கு செல்கிறார்கள்.

அடுத்த ஒரு வார காலம் களத்தில் நமது பணி தேவைப்படுகிறது. தொண்டர்கள் அனைவரும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். பாஜக நிர்வாகிகள் கடந்த 3 மாத காலமாக அமைப்பு பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். புதியவர்கள் ஏராளமானோரை கட்சியில் இணைத்திருக்கிறீர்கள். மிகக் கடுமையாக உழைத்த உங்கள் எல்லாருக்கும் எனது பாராட்டுக்கள். வரலாறு காணாத அளவுக்கு பாஜகவில் உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு பாஜகவில் இருந்த உறுப்பினர்களை விட 8 மடங்கு அதிகரித்துள்ளது. இன்னும் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல், தமிழகம் முழுவதும் கிளை அளவில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. அதன்பிறகு அகில இந்திய தலைவர் வரையிலான தேர்தல் நடக்க உள்ளது. நமக்கு நேரம் இல்லை. தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை 2026 தேர்தல் வாழ்வா சாவா என்கிற தேர்தல். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். எனவே, அனைவரும் களத்தில் வேகமாக உழைக்க வேண்டும்.

ஹெச்.ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவு தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை நாங்கள் பரிசீலித்து கொண்டிருக்கிறோம். பாஜக முழுமையாக ஹெச்.ராஜா பக்கம் துணை நிற்கும். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அவருக்கான நீதி நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், மாநில செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x