Published : 02 Dec 2024 03:37 PM
Last Updated : 02 Dec 2024 03:37 PM
சென்னை: அரசுப் பதவிகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நாளை (டிச.3) உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
அரசு பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சென்னையில் நாளை மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ரூபன்முத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டி பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். இதையொட்டி 2023 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாக கணக்கிட்டு, சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை 2023 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி அனைத்து அரசு துறைகளிலும் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அனைத்து பணியிடங்களையும் தேர்வு செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு மூலம் அப்பணியிடங்களை நிரப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசிதழ் 2024 பிப்.27-ம் தேதி வெளியானது. அதில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை நடைமுறைப்படுத்தப்படும்.
இதையொட்டி அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு மூலம் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் கண்டறிந்து நிரப்பப்படும். அரசு கல்லூரிகளில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண விலக்கு, தேர்வு கட்டண விலக்கு, மடிக்கணினிகள் வழங்கப்படும். அரசு பதவிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை இந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (டிச.3) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம். போராட்டத்துக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் இடம் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT