Published : 02 Dec 2024 03:17 PM
Last Updated : 02 Dec 2024 03:17 PM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நேற்று இரவு 14 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாத பெய்த மழையால், நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர், அண்ணா நகர், ஜீவா நகர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால், அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பாக மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (டிச.2-ம் தேதி) வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபெஞ்சல் புயலால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை நகரத்தை ஒட்டியுள்ள ஏரி நிரம்பி, அதில் இருந்து வெளியேறிய உபரிநீரில், பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மினி வேன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பள்ளத்தில் விழுந்து சேதமடைந்துள்ளன.
இந்த வாகனங்களை சீர் செய்ய வேண்டுமென்றால், அதிக செலவு ஏற்படும். இந்த சுற்றுலா வாகனத்தை நம்பி ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் உள்ளனர். தற்போது சுற்றுலா வாகனங்களுக்கு நல்ல சீசன், சபரிமலைக்கு வாடகை வாகனங்கள் அதிகளவில் செல்லும் நிலையில், கனமழையால் வாகனங்கள் கடும் சேதமாகி உள்ளது. எனவே, திமுக அரசு பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். ஊத்தங்கரை நகரத்தின் ஏரியை ஓட்டி உள்ள 55 குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்குத் தேவையான நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். மேலும், எதிர்வரும் காலத்தில், ஏரியை ஓட்டி வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். கனமழையால், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் நெற்பயிர், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. எனவே, வேளாண்மை, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கீடு செய்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சியில் தான்..” எனக் கூறியுள்ளார். அவர் நேற்று கூறிய அதே நேரத்தில், திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விழுப்புரம் நகரத்தில் உள்ள மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். இவ்வாறு பழனிசாமி கூறினார். இந்நிகழ்வின்போது, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, எம்எல்ஏக்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT