Last Updated : 02 Dec, 2024 01:41 PM

 

Published : 02 Dec 2024 01:41 PM
Last Updated : 02 Dec 2024 01:41 PM

கனமழை, மூடுபனி தாக்கம்: சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் தற்காலிக மூடல்

மழை காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படும் புல்மேடு வனப் பாதை. படம்:என்.கணேஷ்ராஜ்.

தேனி: கனமழை மற்றும் மூடுபனியின் தாக்கத்தினால் சபரிமலைக்குச் செல்லும் புல்மேடு, பெரிய பாதை வனப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர். மேலும் தொடர் மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புயல் தாக்கம் காரணமாக சபரிமலையில் கடும் மழையும், 40 கி.மீ. வேகத்தில் காற்றும் வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.30) மாலையில் இருந்து சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் பக்தர்கள் சபரிமலை செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வழிநெடுகிலும் உள்ள கடைகளில் பலரும் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும் ஏராளமான பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாமல் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மழைநீடிக்கும் என்ற வானிலை அறிவிப்பினால் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்வதுடன், வனப்பகுதிகளில் மூடுபனி தாக்கமும் அதிகரித்துள்ளது. ஆகவே வண்டிப்பெரியாறு அருகே சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்துக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை நதியில் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இன்றி காணப்படும் படித்துறை.

இதேபோல் பெரிய பாதை எனப்படும் எரிமேலியில் இருந்து முக்குழி வழியாகவும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அனைவரும் தற்போது எரிமேலியில் இருந்து பம்பை வரை வாகனத்தில் சென்று பின்பு அங்கிருந்து மரக்கூட்டம், நீலிமேலை, சரங்கொத்தி வழியாக சந்நிதானத்துக்குச் சென்று வருகின்றனர்.

இது குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: "ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது சத்திரம், புல்மேடு வழியாக சந்நிதானம் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவை பக்தர்கள் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை தலைவர், பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையினால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. ஆகவே, இந்த நதியில் குளிக்கவும், கடந்து செல்லவும், துணிகளை அலசவும் தடை விதித்து பத்தனம்திட்டா ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இயல்பு நிலை திரும்பும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை மாறுபாட்டினால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x