Published : 02 Dec 2024 01:12 PM
Last Updated : 02 Dec 2024 01:12 PM
சேலம்: ஃபெஞ்சல் புயலால் ஏற்காட்டில் 144.4 மில்லி மீட்டர், 238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிக கன மழை பெய்தது. இதனால், ஏற்காடு மலை கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சேலம் ஏற்காடு சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவால் ஏற்காடுக்குச் செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல, ஏற்காட்டில் சனிக்கிழமை 144.4 மில்லி மீட்டர் மழையும் , ஞாயிற்றுக்கிழமை 238 மில்லி மீட்டர் என கனமழை கொட்டியது. காற்றுடன் பெய்த தொடர் மழையால் ஏற்காட்டில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டுள்ளனர். ஏற்காடு 60 அடி பாலம் அருகே ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் பல இடங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டின் பல மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்காட்டில் ஏற்பட்ட மண் சரிவு பகுதியில் நேற்று ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மண்சரிவை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் இடங்களை ஆய்வு செய்து மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, ஏற்காட்டில் பல கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் வீடுகளில் மின்சார வசதியின்றி இருள் சூழ்ந்த நிலையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில் வெளியிடங்களுக்கு மக்கள் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மழையால் ஏற்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT