Published : 02 Dec 2024 12:44 PM
Last Updated : 02 Dec 2024 12:44 PM
மதுராந்தகம்: ஃபெஞ்சல் புயல் பாதித்த மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை கரையை கடந்தது. இதனால், மேற்கண்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், நீர் நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மதுராந்தகம் வட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதேபோல், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதிகளிலும் இருளர் மக்கள் குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கிழக்கு கடற்கரை சாலை வழியாக விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார். அப்போது, மாமல்லபுரம் அருகேயுள்ள தேவனேரியில் உள்ள இருளர் மக்களை சந்திந்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அப்பகுதி மீனவர்கள் தேவனேரி பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் மற்றும் இருளர் மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மனுக்களை வழங்கினர்.
பின்னர், அங்கிருந்து கல்பாக்கம் பகுதிக்கு சென்ற முதல்வர் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர், இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் உள்ள கடப்பாக்கம் அடுத்த சேமிலிபுரம் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வின் போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT